மாணவர்களை தேடிச்சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியருக்கு குவியும் பாராட்டுகள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

மாணவர்களை தேடிச்சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியருக்கு குவியும் பாராட்டுகள்

சுல்தான்பேட்டை அருகே மாணவர்களை தேடிச்சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மாணவர்களுக்கு ஆசிரியர் மகரஜோதி கணேசன் பாடம் நடத்துவதை படத்தில் காணலாம்.
கொரோனா பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் தொடர்கிறது. ஊரடங்கு காரணமாக பள்ளி,
கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைனில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதில் பல சிரமங்கள் உள்ளன. குறிப்பாக செல்போனில் இன்டர்நெட் வேகம் இல்லாததால்
இணையதளத்தை பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இதனால் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களிடம் செல்போன்கள் இருந்தும்,
அதில் ஆன்லைன் மூலம் பாடம் படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி புத்தூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மகரஜோதி கணேசன் மாணவர்களை
தேடி சென்று பாடம் நடத்தி வருகிறார். இதற்காக அவர் அந்தப்பகுதியில் உள்ள மரத்தடி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இடத்தை
ஏற்படுத்தி அங்கு மாணவர்களை அமர்த்தி பாடம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.
கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களை தேடிச்சென்று பாடம் நடத்தி வரும் தலைமை ஆசிரியருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள்
குவிந்த வண்ணம் உள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியர் மகரஜோதி கணேசன் கூறியதாவது:-
எங்கள் பள்ளியில் மொத்தம் 65 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களின் பெற்றோர் கூலி வேலைதான் செய்து வருகிறார்கள்.
தற்போது பள்ளிகள் திறக்காததால் தங்களின் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் இருந்தனர்.
நான் அவர்களை சந்தித்து எனது முடிவை சொன்னபோது மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் குழந்தைகளை அனுப்பி வைத்தனர். இதனால் கோவில்,
பொது இடம், மரத்தடி ஆகிய இடங்களில் வைத்து 2 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்று கொடுத்து வருகிறேன்.
தற்போது தினமும் 30 மாணவர்கள் வருகிறார்கள்.
தொடக்கத்தில் வாரத்துக்கு ஒருமுறைதான் பாடம் கற்று கொடுத்தேன். தற்போது தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை குழந்தைகளுக்கு
பாடம் நடத்துகிறேன். மாணவர்களுக்கு அனைத்து பாடங்கள் நடத்தப்பட்டாலும் ஆங்கிலம், அறிவியல் பாடத்திற்கு மிக முக்கியத்துவம்
அளிக்கப்படுகிறது.
சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து மாணவர்கள் பாடம் படித்து வருகின்றனர். எனது இந்த பணிக்கு வட்டார கல்வி அதிகாரி பிரான்சிஸ்
சார்லஸ் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஒத்துழைப்பு தருவதால் மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்லடம் அருகேகாளி வேலம்பட்டியை சொந்த ஊராக கொண்ட தலைமை ஆசிரியர் மகர ஜோதி கணேசன் கடந்த ஆண்டு டாக்டர்
ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment