கல்வியியல் கல்லூரிகளுக்கான காலியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்குமா ? - ஆசிரியர் மலர்

Latest

25/08/2020

கல்வியியல் கல்லூரிகளுக்கான காலியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்குமா ?


தமிழகத்தில் சென்னை அடையாறு, புதுக்கோட்டை உட்பட 14 அரசு கல்வியியல் ((Bed,Med)கல்லூரிகளும், 650 மேற்பட்ட தனியார் கல்லூரிகளும் செயல்படுகின்றன.
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படுகிறது. சமீபத்தில் இவ்வலுவலகம் நடத்திய ஆய்வு கூட்டம் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில அரசு கல்வியியல் கல்லூரி காலியிடம், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டதாக தெரிகிறது.
இதன்படி, தமிழக அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான முதல்வர், பேராசிரியர், உதவிப் பேராசிரி யர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்எட், பிஎட் மற்றும் ஸ்லெட், நெட் அல்லது பிஎச்டி கல்வி தகுதியில் பணிபுரியும் ரெகுலர் பேராசிரியர்கள் குறித்து கணக்கெடுக்க உயர்கல்வித்துறை அனைத்து மண்டல கல்லூரி கல்வி இயக்குநர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பியது. இதற்கான பட்டியலை இணை இயக்குநர்கள் நேற்று முதல் அரசுக்கு அனுப்புகின்றனர்.
இந்த நடவடிக்கையால் ஏற்கனவே கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியத் தேவையான கல்வித் தகுதியுடன் வாய்ப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் உதவிப் பேராசிரியர்கள் பாதிக்கப்படுவதாகவும், கல்வியியல் கல்லூரிக்கு மாறுதலாகும் பேராசிரியர்கள் காலியிடத்திற்கு அரசுக் கல்லூரிகளில் புதிய நியமனம் உண்டா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது குறித்து தனியார் கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பார்த்தசாரதி கூறியது:
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் நடத்திய ஆய்வின் மூலம் தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் நீண்ட நாட்களாகவே நிரப்பாமலும், போதிய கட்டமைப்பு வசதிகள் இன்றியும் இருப்பது தெரிந்தது.
தேசிய கல்வி வாரியம் உத்தரவால் முதற்கட்டமாக சென்னை, கோவை, வேலூர் அரசுக் கல்வியியல் கல்லூரிகளில் முதல்வர், பேராசிரியர்கள் என, 50-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் ஸ்லெட் அல்லது நெட் தகுதித் தேர்வுடன் பிஎச்டி முடித்த சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரிவதற்கான தகுதியோடு தனியார் கல்வி நிறுவனம், பிறதுறைகளிலும் குறைந்த சம்பளத்தில் பணிபுரிகின்றனர்.
மாதம் ரூ.6 ஆயிரம் 10 ஆயிரம் சம்பளத்தில் குடும்பத்தை நகர்த்தவே சிரம்மப்படுகிறோம். இது போன்ற சூழலில் கல்வியியல் கல்லூரிக்காகவே பிரத்யேக தகுதியுள்ள (எம்எட்) என்னைப் போன்றவர்களை கொண்டு கல்வியியல் கல்லூரிகளுக்கான காலியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459