ஒற்றைத் தலைமையின்கீழ் இணைக்கப்படும் உயர்கல்வி அமைப்புகள்!! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஒற்றைத் தலைமையின்கீழ் இணைக்கப்படும் உயர்கல்வி அமைப்புகள்!!

புதிய கல்விக் கொள்கையால் ஒற்றைத் தலைமையின்கீழ் இணைக்கப்படும் உயர்கல்வி அமைப்புகள்

புதிய கல்விக் கொள்கையின்படி மருத்துவ மற்றும் சட்டப் படிப்புகளைத் தவிர ஒட்டுமொத்த உயர் கல்விக்கும் ஒரே அமைப்பாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யுஜிசி, ஏஐசிடிஇ, என்ஏஏசி உள்ளிட்ட அமைப்புகள் இணைக்கப்பட்டு, ஒரே அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்பட உள்ளது.

இனி வரும் காலங்களில் இந்திய உயர் கல்வி ஆணையம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும்.

1. ஒழுங்குமுறைக்காக தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறைக் குழு National Higher Education Regulatory Council (NHERC),

2. தர நிர்ணயித்தலுக்காக பொதுக் கல்விக் குழு General Education Council (GEC),

3. நிதியுதவிக்காக உயர் கல்வி மானியக் குழு Higher Education Grants Council (HEGC)

4. அங்கீகாரத்துக்காக தேசிய அங்கீகாரக் குழு National Accreditation Council (NAC).

செயல்திறனை உயர்த்தியும் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தும் இந்திய உயர் கல்வி ஆணையம் இயங்கும் வகையில், தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். அதேபோல, விதிகள் மற்றும் தரங்களைப் பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் எனவும் ஒழுங்குமுறை, அங்கீகாரம் மற்றும் கல்வித் தரத்தில் அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் ஒரே மாதிரியான விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படும் என்றும் தேசிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் யுஜிசி, என்ஏஏசி, ஏஐசிடிஇ உள்ளிட்ட அமைப்புகள் இணைக்கப்பட்டு, ஒரே அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்பட உள்ளன.

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக இருந்து வந்தது. அதாவது பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியை அங்கீகரித்து, அதைத் தொடங்க உதவும் அமைப்பு யுஜிசியாகும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி நிதியுதவியும் அளித்து வருகிறது.

யுஜிசி முதன்முதலில் 1945-ல் 3 மத்தியப் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க உருவாக்கப்பட்டது. பின்னர் 1947-ம் ஆண்டில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. 1956-ல் தன்னாட்சி பெற்ற அமைப்பாக மாற்றப்பட்டது. இதன் கீழ் மத்திய, மாநில, தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

என்ஏஏசி (நாக்) யுஜிசியால் 1994-ல் உருவாக்கப்பட்ட தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இது பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதுநாள் வரை இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், இதன் கீழ் மதிப்பிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வந்தன. யுஜிசி அங்கீகரித்த பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் வழங்கப்படும் படிப்புகளை நாக் மதிப்பிட்டு, அங்கீகாரம் வழங்கி வந்தது.

ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கான கவுன்சில், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகள், மேலாண்மைப் படிப்புகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.


புதிய கல்விக் கொள்கையின் மூலம் யுஜிசி, என்ஏஏசி, ஏஐசிடிஇ உள்ளிட்ட அமைப்புகள் அனைத்தும் ஒரே புள்ளியில் (இந்திய உயர் கல்வி ஆணையம்) இணைக்கப்பட்டு செயல்பட உள்ளது. எனினும் உயர்கல்வி ஆணையத்தின் 4 பிரிவுகள் மேற்குறிப்பிட்ட அமைப்புகளின் செயல்பாட்டை மேற்கொள்ளும்.

நீண்ட காலமாகவே இந்திய உயர் கல்விக்கான அமைப்புகள் அனைத்தையும் ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முயன்று வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment