வங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

வங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை


தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் அளவுக்கு நகைக்கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டத்தை நடத்துகிறது. நடப்பு நிதியாண்டுக்கான 2வது கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, சக்தி காந்ததாஸ் நேற்று அறிவித்தார்.

அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு: கடன் வட்டி: தற்போதைய கடன் தேவையை கருத்தில் கொண்டும், பொருளாதார மீட்புக்கு கடன் வழங்கல், பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கவில்லை. இதனால், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 3.5 சதவீதமாகவும் நீடிக்கிறது. 

குறு, சிறு தொழில் கடன் மறு சீரமைப்பு: கொரோனா ஊரடங்கால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் திண்டாடுகின்றன. கடந்த ஜனவரி 1ம் தேதிப்படி கடன் செலுத்த முடியாத ஆனால், வராக்கடனாக ஆகாத இந்த நிறுவனங்களின் கடன்களை மறு சீரமைப்பு செய்யும் நடைமுறை தற்போது உள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் 1ம் தேதிப்படி மேற்கண்ட வரைமுறையில் உள்ள கடன்களை வரும் மார்ச் 31ம் தேதி வரை மறுசீரமைப்பு செய்ய அவகாசம் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடன் மறுசீரமைப்புக்கு ரிசர்வ் வங்கி சில வரையறைகளை வைத்துள்ளது. 

இதற்கு உட்பட்டு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுபோல், கொரானாவால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு பெரிய நிறுவனங்கள், தனிநபர்களின் கடன்களை மறு சீரமைப்பு செய்ய அவகாசம் வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. நபார்டு: தொழில் துறைகள் முடங்கியதால் வங்கிகளின் நிதி நிலை மோசமாகி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, நபார்டு மற்றும் வீட்டுக்கடன் நிதி நிறுவனங்களுக்கு தலா ரூ.5,000 கோடி வீதம், மொத்தம் ரூ.10,000 கோடி நிதி வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது, விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை ஏற்றம் பெற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகைக்கடன்: தனிநபர்கள், சிறு தொழில் துறைகள், சிறிய வியாபாரிகள் பலரின் அவசர பணத்தேவைக்கு நகைதான் ஆபத்பாந்தவனாக திகழ்கிறது. தற்போது, விவசாயம் சாராத கடன்களுக்கு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் அளவுக்கு நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மற்றும் மக்கள், சிறு வியாபாரிகளின் கடன் தேவையை கருத்தில் கொண்டு, நகை கடன்களுக்கான வரம்பை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் அளவுக்கு நகைக்கடன் வாங்கலாம். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை இந்த சலுகை அமலில் இருக்கும்.

இதுபோல், காசோலை மோசடிகளை தவிர்க்கும் வகையில், புதிய நடைமுறையை கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ரூ.50,000க்கு மேல் உள்ள காசோலைகளுக்கு இந்த நடைமுறை இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து வங்கியாளர்கள் சிலர் கூறுகையில், காசோலை மோசடிகளை தவிர்க்கும் வகையில் கடந்த 2010ம் ஆண்டு, காசோலையில் இடம்பெற வேண்டிய குறைந்த பட்ச பாதுகாப்பு அம்சங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. தற்போது புதிய மேம்படுத்தப்பட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது. 

உதாரணமாக, காசோலையை பெறும் வங்கிகள் அதனை நகல் அடுத்து சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு அனுப்பினால் உடனே சரிபார்த்து உண்மை தன்மையை தெரிவித்து விடும் என்றனர். புதிய நடைமுறை குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பொருளாதார பாதிப்பு நடப்பு நிதியாண்டு முழுவதிலும் தொடர வாய்ப்பாக உள்ளன. கடந்த ஏப்ரல் - மே மாதங்களுடன் ஒப்பிடுகையில் பொருளாதாரம் சற்று மீளத்தொடங்கியதாகவே கருதலாம். ஆனாலும், உலக பொருளாதார பாதிப்பு மற்றும் வைரஸ் பாதிப்பால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தொடர்வதால், பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. ஜூலை செப்டம்பர் வரை பண வீக்கம் அதிகமாகவே இருக்கும். 2ம் அரையாண்டில் சற்று குறையும். வரும் செப்டம்பர் காலாண்டில் உற்பத்திக்கு தேவை ஏற்படலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் இல்லாத கார்டு பரிவர்த்தனை: கிரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் மொபைல், இணைய வங்கி மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. இதை மேலும் ஊக்குவிக்க, புதிய திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி, இன்டர்நெட் அல்லாத இடங்களில் கார்டு, மொபைல் மூலம் பணம் செலுத்தும் வசதியை கொண்டுவர உள்ளது. இதற்கான தீர்வை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

* தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் அளவுக்கு நகைக்கடன்களை வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. 
* இதனை 90 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால், கூடுதலாக நகைக்கடன் வாங்க முடியும். தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்பதை நிரூபிப்பதாகவும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

No comments:

Post a comment