அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.2,000 - ஆசிரியர் மலர்

Latest

23/08/2020

அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.2,000

காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் இந்த புது வியூகம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளிக்கூட ஆசிரியர்கள் சார்பில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 365 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. அதாவது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 6-ம் வகுப்பு படிக்க 3 மாணவர்களும், கடந்த ஆண்டு 10 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இந்த பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி தற்போது 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பள்ளிக்கூடத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளிக்கூட ஆசிரியர்கள் சார்பில் துண்டு பிரசுரம் அச்சடிக்கப்பட்டு, காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வினியோகம் செய்யப்படுகிறது.
அந்த துண்டு பிரசுரத்தில், இது பள்ளி அல்ல 91 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பழமையான கோவில், பள்ளிகளுக்கெல்லாம் தாய் பள்ளி, மன்னை மாநகரின் மூத்தப்பள்ளி, பல சாதனையாளர்களை உலகுக்கு அளித்த பள்ளி, குறைந்த மதிப்பெண் பெற்ற கற்றல் திறன் குறைபாடுடைய ஏழை, எளிய குழந்தைகளுக்கும் தரமான கல்வியை கொடுக்கும் உன்னதப்பள்ளி, புதிய நல்மாற்றத்தை நோக்கி மாறுபட்ட பரிமாணத்தில் நமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகும்.
எனவே 6-ம் வகுப்பில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், பள்ளியின் சிறப்பம்சங்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களின் புது வியூகம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த துண்டு பிரசுரம் தற்போது சமூக வலைதளத்திலும் வைரலாகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459