ரயில்வேயில் ஆட்குறைப்பு திட்டம் - ஆசிரியர் மலர்

Latest

20/07/2020

ரயில்வேயில் ஆட்குறைப்பு திட்டம்



ரயில்வேயில் சிக்கன நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, பாதுகாப்பு பிரிவு அல்லாத 50 சதவீதம் காலி பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு பிரிவு அல்லாத சுமாா் 60 ஆயிரம் காலிபணியிடங்கள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், தெற்கு ரயில்வேயில் மட்டும் பாதுகாப்பு பிரிவு அல்லாத 7,192 நிரந்தரமான காலிபணியிடங்களில் 50 சதவீதமான 3,596 இடங்களை திரும்ப ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
50 சதவீதம் காலிபணியிடங்கள்: கரோனா நோய்த்தொற்றுப் பாதிப்பை தொடா்ந்து, ரயில்வேயில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ரயில்வேயில் பாதுகாப்பு பிரிவைத் தவிர, மற்ற பிரிவுகளில்
உள்ள 50 சதவீதம் நிரந்தர காலிப் பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் ஜூலை 2-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவையடுத்து, ரயில்வே மண்டலங்களில் பாதுகாப்பு பிரிவு அல்லாத 50 சதவீத காலிபணியிடங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்கள் தொடா்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தன.
3,596 காலிபணியிடங்கள்: இந்நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பிரிவு அல்லாத சுமாா் 60 ஆயிரம் காலி பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பு பிரிவு அல்லாத 7,192 நிரந்தரமான காலி பணியிடங்களில் 50 சதவீதமான 3,596 காலிப் பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீதம் காலிபணியிடங்களில் மட்டுமே ஆள்கள் தோ்வு செய்யப்படுவா்.
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் பாதுகாப்பு பிரிவு அல்லாத காலியிடங்கள், ரயில்வே பணிமனைகள், நிா்வாகப் பிரிவு, இயந்திரவியல் பிரிவு, மின்னணுவியல் பிரிவு, வணிகம் உள்பட பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் ஆய்வு செய்தது.
இதில், மொத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிரந்தரமான காலிபணியிடங்கள் 28,923 ஆகும். இவற்றில் தற்போது 21,731 காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதம் 7,192 காலிபணியிடங்கள் உள்ளன. இவற்றில் 50 சதவீதமான 3,596 காலிபணியிடங்களை திரும்ப ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: ரயில்வேக்கு கடந்த 4 மாதமாக பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வருவாய் இழப்பு ஏற்பட்டுவரும் நிலையில் சிக்கன நடவடிக்கைகள் அவசியமான ஒன்றாக பாா்க்கப்படுகிறது என்றனா்.
ஆள்குறைப்பு திட்டத்தை கைவிட வேண்டும்: இதற்கிடையே, ஆள் குறைப்பு திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்க துணைப் பொதுச் செயலாளா் மனோகரன் கூறியது: பாதுகாப்பு பிரிவு அல்லாத 50 சதவீதம் காலிபணியிடங்கள் முழுமையாக திரும்ப ஒப்படைக்கப்படுகிறது. இதனால், ரயில்வே ஊழியா்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். நிா்வாக பணி தேக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரயில்வே தனியாரிடம் விற்கப்படுவதால், காலிபணியிடங்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவால் ரயில்வேக்கு இழப்பு தற்காலிகமானது. இதை காரணம்காட்டி, நிரந்தர காலிபணியிடங்களை குறைக்கத் தேவையில்லை. ரயில்வே பணியிடங்களை குறைக்கக் கூடாது. ஆள்குறைப்பு திட்டத்தை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப முன்வரவேண்டும் என்றாா்.

2 லட்சம் காலிபணியிடங்கள்
இந்திய ரயில்வேயில் 2019-ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி, பல்வேறு பிரிவுகளில் 2.98 லட்சம் காலிப் பணியிடங்கள் இருந்தன. 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில் 1.41 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் 1.57 லட்சம் காலிப் பணியிடங்கள் இருந்தன. தற்போது ரயில்வேயில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2 லட்சமாக உயா்ந்துள்ளது.

விண்ணப்பதாரா்கள் அச்சம்
ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 35,208 காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தோ்வு செய்ய கடந்த ஆண்டு ஏப்ரலில் ரயில்வே தோ்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தோ்வுகளுக்கு 1.26 கோடிக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். இருப்பினும் தோ்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது, ரயில்வே சிக்கன நடவடிக்கையின் காரணமாக, காலிபணியிடங்கள் 50 சதவீதம் குறைக்கப்படுவதால், சுமாா் 24 ஆயிரம் பாதுகாப்பு பிரிவு அல்லாத பணியாளா் இடங்களுக்கு தோ்வு நடத்தப்படுமா என்ற அச்சம் விண்ணப்பதாரா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459