பள்ளிக்கு பீஸ் கட்ட கூவி..கூவி பூ விற்கும் குழந்தைகள். : கொரோனா கொடூரம் - ஆசிரியர் மலர்

Latest

24/07/2020

பள்ளிக்கு பீஸ் கட்ட கூவி..கூவி பூ விற்கும் குழந்தைகள். : கொரோனா கொடூரம்

கோயம்புத்தூர் அருகே மருதமலையில் உள்ள பரபரப்பான சாலையில் அவர்கள் பூக்கள் விற்கிறார்கள். அந்தக் குழந்தைகளை வாகனங்களும் நடந்துசெல்பவர்களும் எளிதில் கடந்துசென்றுவிடுவார்கள். ஆனால், பச்சிளம் பாலகர்கள் எதற்காக பூ விற்கிறார்கள் என்பதை அறிந்தால் ஒரு பாக்கெட்டாவது வாங்கிச் செல்லக்கூடும்.
ஆறு வயது ஜோயாவும், அவளது ஏழு வயது சகோதரன் தன்வீரும் சாலைகளில் வந்துபோகும் வாகனங்களில் பூ விற்கும் காட்சி காண்போரை கண்கலங்கவைக்கும். தந்தை சபீர் சாலையோரம் அமர்ந்தபடி பிளாஸ்டிக் பைகளில் மல்லிகைப் பூக்களை நிரப்பிக் கொடுக்கிறார். அதுவொரு கொரோனா கொடுத்த கொடுந்துயர் காட்சியாக கண்களில் விரிகிறது.  
சாலையில் வருவோர் போவோரிடம் பூக்கள் நிரம்பிய பிளாஸ்டிக் கவர்களை நீட்டியபடி கூவிக்கூவி விற்கிறார்கள். கொரானா பரவல் காரணமாக  பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிக்கும் செல்லமுடியவில்லை. தந்தைக்கும் வருமானமில்லை. பள்ளிக் கட்டணத்தைக் கட்டமுடியாத அவலநிலையில், தந்தைக்கு வேறுவழி தெரியவில்லை. குழந்தைகளின் கையில் பூக்களைக் கொடுத்துவிட்டார்.
தந்தை சபீரின் குரலில் கவலையும் வருத்தமும் கலந்திருக்கிறது. “ரயிலில் அன்னாசிப் பழத்துண்டுகள் மற்றும் ஸ்நாக்ஸ் விற்றுக்கொண்டிருந்தேன். இப்போது ஒரு ரயிலும் ஓடவில்லை. என் வருமானம் அதலபாதளத்திற்குச் சென்றுவிட்டது. கொரானாவுக்குப் பிறகு குழந்தைகள் இருவருக்கும் பள்ளிகளைத் திறந்துவிடுவார்கள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பூக்கள் விற்றால் ஒரு நாளைக்கு 300, 400 ரூபாய் கிடைக்கும்.
என்ன செய்வது? அவர்களையும் வேலைக்கு அழைத்துவந்துவிட்டேன். என் குழந்தைகளை பூ விற்கவைப்பது மனசுக்கு வருத்தமாக இருக்கிறது. வேறு வழியே தெரியவில்லை. அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. ரயில்கள் ஓடாமல் வருமானமும் இல்லை. இந்த நிலையில் எப்படி பள்ளிக் கட்டணம் செலுத்தமுடியும். எங்க பசியைத் தீர்ப்பதற்காக வேலை பார்க்கிறோம். அரசும் மாவட்ட நிர்வாகமும் மனசு வைத்தால் என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம்” என்று கவலையுடன் பேசும்போது மனம் கனக்கிறது.
ஊரடங்கால் கொரோனா பரவல் தடுக்கப்படலாம். வருமானம் குறைந்த நிலையில், வறுமைக்குத் தள்ளப்பட்ட ஏழைக் குடும்பங்களின் பசிக்கு என்ன செய்வது?

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459