கொரோனா நிவாரண நிதி கிடைக்குமா ? ஏக்கத்துடன் கௌரவ விரிவுரையாளர்கள் காத்திருப்பு - ஆசிரியர் மலர்

Latest

05/07/2020

கொரோனா நிவாரண நிதி கிடைக்குமா ? ஏக்கத்துடன் கௌரவ விரிவுரையாளர்கள் காத்திருப்பு


நெல்லை: கொரோனா தடை காரணமாக வேலையின்றி தவிக்கும் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு நிவாரண உதவி வழங்க  வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள்  பற்றாக்குறையை சமாளிக்க ‘கெஸ்ட் லெக்சரர்’ என்ற கவுரவ விரிவுரையாளர்கள், தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு  வகுப்புகள் எடுத்து சமாளிக்கின்றனர். தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்து 60க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு அரசு கலை,  அறிவியல் கல்லூரிகளில் பணி செய்கின்றனர். இவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. அதுவும் ஏப்ரல், மே  மாதங்களில் வழங்கப்படுவது கிடையாது.
அந்தக் கால கட்டத்தில் செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் திருத்துவது போன்ற பணியால் கிடைக்கும் வருவாய் மூலம் வாழ்வாதாரத்தை  சமாளித்து வந்தனர்.
இந்நிலையில் கொரோனா தாக்கம் மார்ச் இறுதியில் ஏற்பட்டதால், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் கூட இன்னும்  நடைபெறவில்லை. அடுத்த கல்வியாண்டிற்கு கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாது என்ற நிலை நீடிக்கிறது. இதனால் கடந்த 4  மாதங்களாக கவுரவ விரிவுரையாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். பல்வேறு துறையினருக்கு கொரோனா கால நிவாரணத் தொகை  வழங்கப்படுகிறது. எனவே தங்களுக்கும் கடந்த ஏப்ரலில் இருந்து கல்லூரிகள் திறக்கப்படும் வரை கொரோனா வாழ்வாதார நிதி வழங்க வேண்டும் என  கவுரவ பேராசிரியர்கள் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459