தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

 




12/06/2020

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்


கரோனா தொற்று தடுப்புப் பணி செயல்பாடுகளில் கடும் விமர்சனம் எழுந்து வந்த நிலையில் சுகாதாரத்துறைச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் அதிரடியாக மாற்றப்பட்டு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மீண்டும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பீலா ராஜேஷ் வணிகவரித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாகத்துறை ஆணையராகவும் தொடர்ந்து நீடிப்பார் என தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.
பீலா ராஜேஷ் நியமனமும் விமர்சனமும்
தமிழக சுகாதாரத்துறைச் செயலராக ராதாகிருஷ்ணன் இருந்த 2019-ம் ஆண்டு மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டார். ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார். சுகாதாரத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டது முதல் அவரது செயல்பாடுகளில் தொடர் விமர்சனம் எழுந்து வந்தது.
கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் முக்கியமாக செயல்பட வேண்டியது சுகாதாரத்துறைச் செயலாளரின் பொறுப்பாகும். இதில் அவரது செயல்பாட்டில் வேகம் இல்லை, அதிகாரிகளை ஒருங்கிணைப்பதில் கவனமின்மை, தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் தொற்று காரணமாக அவரது செயல்பாடு குறித்து விமர்சனம் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் சுகாதாரத் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ராதாகிருஷ்ணன் சென்னை கரோனா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட்டார். அப்போது முதல் சென்னையில் வேகமாக அவர் செயலாற்றி வந்தார். அவரது செயல்பாட்டுக்கு இடையூறாக சுகாதாரத்துறையில் அவரது பொறுப்பு இல்லாததால் அவரால் மேலும் சிறப்பாகச் செயல்படுவதில் சிக்கல் எழுந்ததாகக் கூறப்பட்டது.
சமீபத்தில் கரோனா உயிரிழப்பில் ஏற்பட்ட கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என்கிற புகார் எழுந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் இதைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு சுகாதாரத் துறைச் செயலர் சரியாக பதிலளிக்கவில்லை. சாதாரணமாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனப் பதிலளித்ததும் விமர்சனமாக மாறியது.
ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்
மேலும் அடுத்த மாதம் 2 லட்சமாக தொற்று எண்ணிக்கை உயரும், அக்டோபர் வரை கடுமையாக கரோனா பாதிப்பு இருக்கும் என்பதால் அனுபவம்மிக்க அதிகாரி ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறைக்கு மீண்டும் நியமிக்கப்படலாம் என்கிற பேச்சு தலைமைச் செயலக வட்டாரத்தில் நிலவி வந்தது
இந்நிலையில் தற்போது மீண்டும் சுகாதாரத்துறைச் செயலராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இவர் சுகாதாரத்துறையில் 2011 முதல் 2019 வரை 8 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றிய திறமை மிக்கவர். சென்னையில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தியது, சுனாமி நேரத்தில் நாகை மாவட்ட ஆட்சியராக திறம்படச் செயல்பட்டது போன்ற அனுபவம்மிக்க அதிகாரி ஆவார். சென்னையில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் அவசியம் உள்ள முக்கியமான நேரத்தில் அவர் சுகாதாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459