தொற்று பாதித்தவர்களின் உறவுகள் பள்ளிகளில் தங்க ஏற்பாடு - ஆசிரியர் மலர்

Latest

01/06/2020

தொற்று பாதித்தவர்களின் உறவுகள் பள்ளிகளில் தங்க ஏற்பாடு


சென்னை : கொரோனா பரவலை தடுக்க, தொற்று பாதித்தவர்களின் உறவுகள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை, தனியாக தங்க வைக்க, பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இதர மாவட்டத்தைவிட, சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, குடிசை பகுதியில் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவுவதை தடுக்க, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொற்று பாதித்தவர்கள், பாதிப்பு தன்மையை பொறுத்து, மருத்துவமனை, தனிமை முகாம் அல்லது வீடுகளில் தனிமையில் இருக்க அனுப்பப்படுகின்றனர்.
குடிசை பகுதியில் உள்ள வீடுகள், மிகவும் குறுகலாக உள்ளதால், தனிமைக்கான வசதிகள் அங்கு இருக்காது. இதனால், குடிசை பகுதியில் உள்ள தொற்று பாதித்தவர்களை, மருத்துவமனை அல்லது தனிமை முகாம் அனுப்புகின்றனர்.அவர்களின் உறவுகள் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று பாதித்திருந்தால், மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.
இதனால், அவர்களை தனிமைப்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்தந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கள் தயார் செய்யப்படுகின்றன.
ஒரு வகுப்பறையில், 8 முதல், 12 வரை, மெத்தை, தலையணையுடன் கூடிய படுக்கை வசதி மற்றும் கழிப்பறை வசதி செய்யப்படுகிறது. அவர்களுக்கு, உணவு, கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தினமும், உடல் வெப்பம் பரிசோதிக்கப்படுகிறது.ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்றவும், சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 10 நாட்கள் இருக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் பள்ளிகள், இதற்காக தயார் செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459