மாணவர்களுக்கான சைபர் பாதுகாப்பு வழிமுறைகள் கையேடு : CBSE வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




25/05/2020

மாணவர்களுக்கான சைபர் பாதுகாப்பு வழிமுறைகள் கையேடு : CBSE வெளியீடு


புதுடெல்லி: மாணவர்களுக்கான சைபர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கையேட்டை பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ பகிர்ந்துள்ளது.  கொரோனா வைரஸ் ஊரடங்கு நடவடிக்கை காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனிடையே, டெல்லியில் படிக்கும் தனியார் பள்ளி மாணவர்கள் சிலர், ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் குரூப் ஒன்றை உருவாக்கி இருந்தனர். இதில் தங்களுடன் பயிலும் சக மாணவிகள் குறித்த ஆபாச படங்கள் மற்றும் அது குறித்து விமர்சனங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மாணவர்களுக்கான சைபர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கையேட்டை பள்ளிகளுக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியம் பகிர்ந்துள்ளது. இதில், 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பல்வேறு வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், ஆன்லைன் நட்பின்போது செய்யக் கூடியவை, செய்யக்கூடாத நடவடிக்கைகள் என்னென்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
பதின் பருவத்தினர் எனப்படும் டீன்ஏஜ் மாணவ, மாணவிகள், இனக்கவர்ச்சி தூண்டலால் சிலருடன் உறவில் ஈடுபடுகின்றனர். அந்த உறவில் இருந்து வெளியேறும்போது தங்களின் நட்புகளால் பழி வாங்கப்படுகின்றனர். இதனால், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆபாசமாக வெளியிட்டு பழி வாங்குகின்றனர்.
இவை குறித்து மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பதின் வயது சிறுமியை அவள் மீது பொறாமை கொண்ட வகுப்பு மாணவர்கள், முன்னாள் காதலன் அல்லது சமூக வலைதளங்களில் யார் என்று அறியப்படாத ஒரு நண்பனால் கூட பழிவாங்கலாம்.. ஆன்லைனினால் வரும் அபாயங்களை உணர்ந்து, அந்த தொடர்பில் இருந்து விலகும் போதும் இதே பிரச்னைகளை சம்பந்தப்பட்டவர் எதிர்கொள்ளக் கூடும் என்பதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘எதற்கும் வரம்பு வேண்டும்’
சிபிஎஸ்இ வாரிய மூத்த அதிகாரி கூறுகையில், “ மாணவர்கள் தங்களின்

ஆன்லைன் நண்பர்கள், நிஜ வாழ்க்கை நண்பர்களுடனான ஆன்லைன் தகவல் தொடர்புக்கும் வரம்புகளை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஆன்லைன் மூலம் அனுப்பப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், உரையாடல்களை பகிர்வதற்கும் வரம்பு இருக்க வேண்டும்.
இந்த தகவல்களை இவர் மட்டும்தான் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும் என்று நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, பழிவாங்கும் ஆபாச வலையில் மாணவர்கள் விழாமல் கவனமாக இருக்க வேண்டும். 14 முதல் 18 வயதுக்குட்பட்ட பதின் பருவத்தினர் பழிவாங்கும் ஆபாச நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459