விடைத்தாள் திருத்தும் அட்டவணையில் குளறுபடி : ஆசிரியர்கள் குழப்பம் - ஆசிரியர் மலர்

Latest

13/05/2020

விடைத்தாள் திருத்தும் அட்டவணையில் குளறுபடி : ஆசிரியர்கள் குழப்பம்


பழநி: பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் தேதி மற்றும் தேர்வு முடிவுகள் தேதி அட்டவணையில், பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 12, 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறையே மார்ச் 2 மற்றும் 4ம் தேதிகளில் துவங்கியது. இத்தேர்வுகள் முறையே மார்ச் 24 மற்றும் 26ம் தேதிகளில் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவலின் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பிளஸ் 2 கடைசி தேர்வில் பலர் கலந்து கொள்ளவில்லை.
இதனால் அந்த தேர்வை மீண்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அதுபோல் பிளஸ் 1 கடைசி தேர்வு மட்டும் நடத்தப்படவில்லை. இதனால் கடைசி தேர்வுகள் பிளஸ் 2க்கு ஜூன் 4ம் தேதியும், பிளஸ் 1க்கு ஜூன் 2ம் தேதியும் நடத்தப்பட உள்ளன. அதுபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பம் முதலே கல்வித்துறை தனது அறிவிப்பை பல்வேறு முரண்பாடுகளுடனேயே அறிவித்து வருகிறது. இந்நிலையில், இத்தேர்வுகளுக்கு பின்பு வினாத்தாள் திருத்தும் பணிகளுக்காக, கல்வித்துறை இயக்குநரால் அறிவிப்பு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் தேதிகள் மாற்றி அட்டவணை வெளியிடப்பட்டிருப்பதால் ஆசிரியர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.
தற்போது வெளியிடப்பட்ட அட்டவணையில் மே 28 முதல் ஜூன் 9ம் தேதி வரை பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.
ஜூன் 11 முதல் 23ம் தேதி வரை பிளஸ் 1 வினாத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இதுபோல் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 16 துவங்கி 23ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற வேண்டும். ஆனால் அட்டவணையில் தவறுதலாக ஜூலை 23ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் தேர்வு முடிவுகள் வெளியிடும் பணியும் ஜூன் 24 என்பதற்கு பதிலாக ஜூலை 24ம் தேதி முதல் ஜூலை  4ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பின்னோக்கி செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் குளறுபடியான அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459