தொடர் வாசிப்பில் 4.5.2020 முதல் 6.5.2020 வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பெரும்பாலான நேரங்களை செலவழித்து படித்து முடித்த 32 வது புத்தகம் ஆயிஷா.இரா.நடராசன் சிறுகதைகள்.இப்புத்தகம் 336 பக்கங்களில் 50 சிறு கதைகளை உள்ளடக்கி உள்ளது.
செருப்பு தைப்பவர், தோட்டி, பறையடிப்பவர்,வெட்டியான், ஆயா , மலைக்குறவர் போன்ற விளிம்பு நிலை மக்களின் கதைகள் பெரும்பாலும் உள்ளன.
ஆயிஷா என்ற கதையை படித்த போது கண்களிலிருந்து கண்ணீர் சாரை சாரையாக வடிந்து விட்டது.
ஆயிஷா :
எனக்கு முதன் முதலில் தெரிய வந்த ஆயிஷாவுக்கு 15 வயது .நான் அறிவியல் ஆசிரியை. அன்று காந்த குவியல் குறித்து வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு செவ்வக காந்த துண்டை எடுத்துக்கொண்டு
வட நோக்கு அம்சம் குறித்து கரும்பலகையில் சில கிறுக்களுடன் நட்த்திக் கொண்டே போனேன்.
மிஸ் என்றொரு குரல்.கரும்பலகையிலிருந்து திரும்பினேன். என்ன வாந்தி வருதா? என்றேன். இல்ல மிஸ் சந்தேகம். எரிந்து விழும் குரலில் என்ன என்றேன். மிஸ் அந்த காந்தத்தை ரெண்டா வெட்டினா என்ன ஆகும் மிஸ் ? ரெண்டு காந்தம் கிடைக்கும். அந்த காந்தத்தை வெட்டிக் கொண்டே போனா? முடிவுறா எண்ணிக்கையில் காந்தம் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உட்கார் என்றேன்.மணி அடித்ததும் வகுப்பு அறையை விட்டு வெளியே வந்தேன். கூடவே வந்தது நிழல்.மிஸ் ... ப்ளீஸ் ஒரு நிமிசம். என்னமா சொல்லு. முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை ஓரே நேர்கோட்டில் வச்சா எதிர் துருவங்களை கவரும் அதன் இயல்பு என்ன ஆகும். ஒரு காந்தத்தின் வடக்கு மறு காந்தத்தின் தெற்கை இழுக்கும்.
ஆனால் இழு படும் காந்தத்தின் வடக்கே அடுத்துள்ள காந்தம் ஏற்கனவே இழுத்துகிட்டு இருக்கும் இல்லையா..? மிஸ்.
ஆமா அதுக்கென்ன
என் சந்தேகம் அங்க தான் இருக்கு. எல்லா காந்தங்களின் கவர் திறனும் ஒன்றெனக் கொண்டால் அவை ஒட்டிக் கொள்ள வாய்ப்பே இல்லையே...எப் புறமும் நகராமல் அப்படியேதானே இருக்கும். ஏன் இந்த பிரபஞ்சம் முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை நேர் கோட்டில் வைத்தது போல் அமைக்கப் பட்டதா வெச்சிக்க கூடாது? அந்த கோணத்தில் பூமிங்கிற காந்தத்தை ஆராயலாம் இல்லையா?
இப்படியொரு கேள்வியை நான் கேட்டுக் கொண்டதா நினைவில்லை. எங்கோ படித்ததாக ஞாபகம் என்றேன்.
The truth of the Magnets வெப்ரோட ஸ்டூடண்ட் கிங்லீங் எழுதியது. அருமையா இருக்கும் ... படிக்கிறீங்களா மிஸ்.
இந்த புத்தகமெல்லாம் நீ படிக்கிறாயா ஆயிஷா.. புத்தகத்தை வாங்கி கொண்டு ஆசிரியர் அறைக்கு நகர்ந்தேன். அந்த நிமிடத்திலேயே ஆயிஷா என்னை முழுசாக வென்று விட்டாள். இரவில் புத்தகத்தை எனது விடுதி அறையில் புரட்டிய போது மேலும் பல அதிர்ச்சிகள். அப் புத்தகத்தில் ஆயிஷா அடிக்கோடிட்டிருந்த முறை. ஆங்காங்கே காணப்பட்ட அடிக் குறிப்புகள்.எல்லாமே அவளைக் குறித்த எனது எண்ணத்திற்கு மேலும் மேலும் ஆச்சரியக் குறிகளை சுட்டிக் கொண்டிருந்தன. ஆயிஷா ஒரு குழந்தை இல்லை. வேறு ஏதோ பிறவி.. கடவுளே ... பிறகு நான் ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை. இத்தனை நாட்கள் ஆயிஷாவை பற்றி அறியாதது ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. முதல் பாடவேளையில் வகுப்பு ஏதுமின்றி ஓய்வறையில் இருந்தேன். கணக்கு டீச்சர், வினோதமான கேஸ் லெவன்த் வீட்டு கணக்கு திருத்திக்கிட்டு இருந்தப்ப பாதி பேர் நோட்ல ஒரே கையெழுத்து. ஒருத்திய பிடிச்சு செமத்தியா கொடுத்தேன்
.உண்மையை கொட்டிட்டா. ஒரு டென்த் படிக்கிற ஆயிஷா என்ற பெண் லெவன்த்துக்கு வீட்டு கணக்கு போட்டு தந்துருக்கு. பிறகு அவளது வகுப்பிற்கு நான் போன நேரத்தில் அவளது இடம் காலியாக இருந்தது. விசாரித்தேன். ஆயிஷாக்கு செம அடி மிஸ் என்று கலங்கடித்தார்கள்.ஏதோ ஆகிப் போனேன் .மே ஐ கம் இன் மிஸ் ஆயிஷா நின்றிருந்தாள். அவள் சித்தி வந்து வகுப்பில் இட்டுச் சென்றாள்.. அன்று வகுப்பிலிருந்து கிளம்பும் போது ஆயிஷா ஈவினிங் ஹாஸ்டலில் வந்து என்னைப் பாரு.. தினமும் மாலை 4 மணி முதல் இருட்டும் வரை என் அறையில் இருந்தாள். ஆயிஷா விடம் எனக்கு பிடித்த இரண்டு அம்சங்கள்.ஒன்று அவளது வேகம். அது அசாதாரணமானது. வேகமாக 10-12 பக்கங்களை படித்து விடுவாள். இரண்டாவது கேள்வி கேட்டும் போது அவளது அறிவுப் பசி புரியாததை புரியும் வரை விட மாட்டாள். மிஸ் மெழுகுவர்த்தி எரியுது. ஒரு கேஸ் அடுப்பும் எரியுது. இரண்டுமே நெருப்புத்தான். மெழுகு தீபத்தில் ஒளி அதிகமாகவும், வெப்பம் கம்மியாகவும் இருக்கு. ஆனா அடுப்புல ஓளி கம்மியாகவும் வெப்பம் அதிகமாகவும் இருக்குதே ஏன் மிஸ் ? ஒரு நாள் நான் துவைக்கும் போது அழுக்கை அகற்றுவதற்கும், குளியல் சோப் அழுக்கை அகற்றுவதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன ?கடவுளே இந்தப் பெண் கேள்விகளால் பிரபஞ்சத்தை உலுக்கவே பிறந்திருக்கிறாள்.
கெமிஸ்ட்ரி மிஸ் அடிச்சாங்க... ஏன் ஆயிஷா ? பேப்பர் வந்தது மார்க் சரியா போடலை .. கேட்டேன் சொந்த சரக்குக்கெல்லாம் மார்க் கிடையாதாம். நோட்ஸ்ல இருக்கிறத அப்படியே எழுதனுமாம்
. டென்த்னு மிரட்டுறாங்க மிஸ்.நோட்ஸே தப்பா இருந்தா என்ன பன்னுறதுனு கேட்டுட்டேன்... டீச்சர் அடிச்சா வலிக்காம இருக்க ஏதாவது மருந்து இருக்கா? என்று கேட்கிறாள் ஆயிஷா. அடி அசட்டுப் பெண்ணே என்று கட்டிக் கொண்டேன்.ஒரு இரவு அவள் அவசரமாக வீட்டுக்கு கிளம்பிய போது தனது சிறிய குறிப்பு நோட்டை விட்டுச் சென்று விட்டாள். அன்றைக்கு தான் என் ஆயிஷாவின் இன்னொரு பக்கம் தெரிய வந்தது. நூற்றுக் கணக்கான கேள்விகளின் தேவையை விட இந்த என் ஆயிஷா வித்தியாசமானவள். முதலில் அந்த நோட்டு என் கண்களில் பட்ட போது அதை எடுத்து மேஜையில் வைத்து விட்டு வழக்கமான விடைத்தாள் திருத்தும் வேலையில் இறங்கி விட்டேன். பிறகு ஏதோ ஒரு உந்துதலின் பேரில் அதை எடுத்து புரட்டினேன். முதல் பக்கம் இரண்டு ,மூன்று, நான்காம் பக்கத்தில் எனக்கு முதல் அதிர்ச்சி. ஒரு பக்கம் முழுவதும் ஆயிஷா நூற்றுக்கணக்கான முறை என் பெயரை எழுதி வைத்திருந்தாள். நீண்ட நேரம் அந்தப் பக்கத்தை நோக்கிய எனக்கு கண்ணீர் முட்டியது.
அடுத்து சில பக்கங்களை திருப்பிய போது மேலும் என்னை அதிர்ச்சி அடைய வைத்து விட்டது. கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விழ வைத்தது அந்தப் பக்கம். எனது பெயரை எழுதியிருந்த ஆயிஷா அதற்கு கீழே "என் தாய், என் முதல் ஆசிரியை, என் முதல் முதல் உயிர் " என்று ரத்தத்தினால் எழுதியிருந்தாள். ஆம் அது ரத்தம் தான்... அய்யோ... இது என்ன பெண்ணே உனக்கு நான் என்ன செய்து விட்டேன் .உனது கேள்விகள் சிலவற்றை காது கொடுத்து கேட்டதை தவிர ,அதற்காக வா இத்தனை அன்பை பொழிகிறாய். அம்மா நீ மாபெரும் மனுஷி, என்னுள்ளே யாரைத் தேடுகிறாய்? நீ பார்க்காமல் போன உன் அம்மா அப்பாவையா...? அல்லது யாரையடி என் உயிரே. நீ இல்லாது போயிருந்தால் நான் மட்டும் யாரடி.? ஒரு எந்திரத்தை விட கேவலமான ஆசிரியையாகவே செத்துப் போய்க் கிடந்த என்னை மீட்டெடுத்தவளல்லவா நீ.என் பொக்கிஷமே இத்தனை நாட்கள் எங்கேயடி இருந்தாய்? எனக்கு உடல் சிலிர்த்துப் போனது. ஆயிஷாவுக்கு எப்படியாவது
நன்றியாக எதையாவது செய்ய வேண்டும். உன்னை எப்படி ஆக்குகின்றேன் பாரடி ? அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது..
கெமிஸ்ட்ரி லேப்க்கு பின்புறம் ஆயிஷா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்... அடுத்து என்ன நடந்தது என்பதை புத்தகம் வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பெயர் இல்லாதவர் :
பெயர் இல்லாத ஒருவர் தான் உயிருடன் இருப்பதற்கான சான்று கேட்டு விண்ணப்பித்து இருப்பார். அதிகாரிகள் பலவாறு எரிச்சல் அடைந்து கடைசியாக கீழ்க்கண்டவாறு சான்றழிக்கிறார்.
"உயிரோடு இருப்பவர்கள் யாவருக்கும் பெயர் இருப்பது அவசியம் எனும் அ.வ.கா.கண் -16 கண்டிருக்கும் அடிப்படையில் பெயரில்லாத ஒருவர் உயிருடன் இருக்கும் சாத்தியம் இல்லை என சான்றழிக்கப் படுகிறது." இக்கதையில் பெரியவர்க்கும் அதிகாரிக்குமான உரையாடல் சுவராஷ்யமாக இருக்கும்.
பால் திரிபு:
இதில் அரவாணிக்கு அவரது பெற்றோர்கள் ஜெர்ஸி என்ற பெண்ணை திருமணம் செய்து விடுவார்கள். இந்நிலையில் அந்த அரவாணி துபாய்க்கு வேலைக்கு போய்விடுவதாக பிரிந்து சென்று விடுவார். தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தான் கமலமாக மாறிவிட்டேன் என சொல்வார். பின்பு பத்திரிக்கையில் ஞாயிறு மலர்களில் பர்சனல் என்ற படி அச்சாகும் சொந்த விசயங்கள் பக்கத்தை ஜெர்ஸி விரும்பி படிப்பதை வைத்து கமலம் தன் விசயங்களை அந்தரங்கப் பகுதியில் பதிவு செய்து வருவாள். இதை ஜெர்ஸி படித்தாளா என்பது தான் கதை
விஞ்ஞான கிறுக்கன் :
ஒரு ஊரில் கால்நடை மருத்துவர் புதியதாக மாற்றல் ஆகி வருவார். அவர் வந்து பல நாட்கள் ஆகியும் யாரும் கால்நடைகளுக்கு வைத்தியம் பார்க்க வரமாட்டார்கள். பாழ் அடைந்த மண்டபத்தில் இரவில் கிறுக்கன் ஒருவன் சில மூலிகைகளை காய்ச்சிக் கொண்டும்,அரசமரத்திற்கு ,பறவைகளுக்கு , நாய்களுக்கு வைத்தியம் வைத்தியம் செய்து கொண்டு இருப்பதை கால்நடை மருத்துவர் நேரிடையாக பார்த்துக் கொண்டிருந்தார்.
25 பேர் பார்க்க வேண்டிய வேலையை ஒத்த ஆளாக பார்ப்பது ஆச்சரியத்தைக் கொடுத்தது. வாரம் ஒரு நாள் சந்தை நடக்கும் . அன்று மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி பிள்ளைகளுக்கு, கோழிகளுக்கு,ஆடு,மாடுகளுக்கு வைத்தியம் பார்க்க கிறுக்கனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதனை பார்க்க கால்நடை வைத்தியரும் சந்தைக்கு வந்திருந்தார். கிறுக்கனும் வந்து தனது வைத்தியத்தை தொடர்ந்தார்.
துத்தி இலைல பசும்பால் அரைச்சி சாறு எடுத்து சல்லடையாக்கின களிம்பு இது மூலத்த 20 நாள்ல விரட்டி விடலாம்.புளி,காரம் வேண்டாம். எலுமிச்சை சாப்பிடு .
இது சுவாசக் கோளாறு கிளவி ....தூதுவள பொடி இது கலந்து பால்ல போட்டு குடி , டீயை நிப்பாட்டி புடு கருக்கல குளிக்காத
இது ஒன்னுமே இல்ல தம்பி.மூக்குல இரத்தம் வந்தா என்ன ? வரட்டுமே .. இந்தா கடுக்காயி ஆத்தா கிட்ட கொடுத்து அரச்சி பொட்டலமா வச்சிக்க. ரத்தம் வராப்ல இருந்துச்சுனா மூக்குப் பொடி மாதிரி உறிஞ்சுக்க போயிரும்.
நாய்கடி தானே எந்த ஊரு கரிக்கால் பட்டியிலே வெறி நாயே கிடையாது... காயத்துக்கு பச்சிலை போதும்
ஒன்றுக்கடிக்கிறப்ப ரத்தமும் வருதா பயந்துராத ... இது ஒன்னுமில்ல.. இந்தா இது சோத்துக் கத்தாழ தோலை சீவிடு உள்ள சதை இருக்கிலே தண்ணீலே கழுவிட்டு சாப்பிடு ... பயங்கர கசப்பா இருக்கும். கசப்ப பாக்காத ரத்தம் நிக்கனுமில்ல..
என் ஆன்மாவை அதிர்ச்சி அடைய வைத்தது. அவனது வேகம் மட்டுமல்ல .. கிறுக்கனின் வைத்தியத்திற்கு காசும் இல்ல.. அநாவசிய சீட்டுமில்லை.. அயல் நாட்டு புத்தகங்கள் , பல்கலை பரீட்சையில் முதலிடம் ...அய்யோ சொந்த மண்ணின் சொரணையே இல்லாத என் கல்லூரி படிப்பு .... என் உடலின் ஒவ்வொரு அணுவிலிருந்தும் நான் படித்த ஏட்டுக் கல்வி உதிர்ந்து கொண்டே இருந்தது.
பக்திக்குரிய இடம் கோவில் மட்டுமல்ல :
பாதர்...அதுவும் கக்கூஸ்குள்ள அவசரமாக கழட்டி வச்ச தோத்திர ஜெப மோதிரத்தை இங்கே கழுவ வந்த நான் திருடினேன்னு சொல்றாறு.
ஒழுங்கா பிளஸ்அவுட்ல கையை போட்டு எடுத்து அரை மணி நேரத்திலே குடுத்துடு.
உள்ளே கையை விட்டு உருண்டை உருண்டையாக நரகலு. உள்ளே உள்ள கசடு எல்லாத்தையும் எடுத்தும் மோதிரம் கிடைக்கில்லா.
மரியே பயணம் வெக்கிறேன். நடந்தே வாரனம்மா நீயே துணை என்று சொல்லி மறுபடியும் உள்ளே கையை விடும் போது பொம்பளை முடி வந்துச்சு. பிறகு கறுத்துப் போன பொருள் போல பொருள் வந்துச்சு. அய்யா ரெக்டர் சாமி என்னைய மரி கைவிடலய்யா.தேவ கிருபை எனக்கு இருக்குது. ஐயா நான் திருடலிங்கசாமி இந்தாங்க மோதிரம்.....
"நீங்க கோவில் பணி செய்யிறவரு. நான் கக்கூஸ் வேலை செய்யுற சாதாரண கெழவன். யாருட்டேயும் மூச்சு விட மாட்டேன் அய்யா... மரியே துணை அய்யா... சேசுவுக்கு வெளிச்சம்.
ரெக்டர் ஐயா கக்கூஸிருந்து பொம்பளிங்க முடி நிறைய வந்திருச்சு அதையும் சொல்லலிங்க அய்யா..ஒரு கழுவு கழுவி விட்டு நான் கெளம்பறேங்க....சாமி "
நாத்திகன் மனைவி :
ஊரெல்லாம் ஒரே பேச்சு . மலர்க்கொடி மாரியம்மன் கோவில் வந்திருந்தாள். அதுவும் எப்படி ? தனது நாத்திக புருஷனுடன். கோவில் பூசாரி ஆடிப்போனான். நாத்திகனை பார்க்க கோவிலுக்குள் கூட்டம் கூடி விட்டது. பிளாஸ்பேக்
சாமியை நம்ம சாதிக்காரன் தொடக் கூடாது என்றால் நமக்கு உடம்பில் சாமி வருவது ஏன் ?
நெற்றியில் நாமம் வைத்தால் கன்னி. பொட்டு வைத்தால் கன்னி கழிந்தவள். பொட்டு வைத்தபடி விபச்சாரியான நித்திய கன்னி புருஷர்களை வளைத்து போட்ட கதை கேட்டு குமட்டலெடுத்தது மலர்க்கொடிக்கு
.இது தான் அம்மன் கதை என்று சொன்ன போது ஏற்பட்ட அதிர்ச்சியில் தலை சுற்றி அடுத்த பத்தாவது மாதத்தில் குழந்தை பிறந்தது. கிறிஸ்துவனையும் யூதனையும் தலை குனிய வைத்தவன் நீட்ஸே. அறிவாளியான நீட்ஸே பெயரையே குழந்தைக்கு வைத்தான்.
ஈசுவரன் கோவில் பூஜையின் போது ரிஷி பத்தினிகளை கெடுத்த சிவனின் மர்ம ஸ்தானத்துக்கா பாலாபிஷேகம் ?
ராவுத்தர் வீட்டு பசுவுக்கு ஏன் இல்லை முக்காடு ?
கேளுங்கள் தரப்படும் என்பது தான் ஏசுவின் தாரக மந்திரம் என்றால் சர்ச் வாசலில் பிச்சைக்காரன் ஏன்?
விஷ்னுக்கும் சிவனுக்கும் பிறந்தானாம் அய்யப்பன்.ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா? சிவனுக்கு எய்ட்ஸ் வராதது ஏன்? கோவிலுக்கு நாத்திகன் வரக் காரணம் என்ன என்பதை இப்புத்தகம் வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சுசீ முதல் சுசீ வரை :
சுசீ காபி கொடு
சுசீ அந்த பேப்பரை எடு
சுசீ என்ன டிபன்
சுசீ டேப் ரெக்கார்டுல கந்த சஷ்டி கவசம் போடேன்
சுசீ கோபாலுக்கு எண்ணை தேய்த்து குளிக்க வை
சுசீ பேனா மை கொட்டியதை துடைத்து விடு
சுசீ டீ ஒன்னு போடு
சுசீ தலை வலிக்குது அந்த டேப்பை அணைச்சிடு.
சுசீ அந்த சிகரெட் பாக்கெட்டை எடு
சுசீ வெந்நீர் எடுத்து வச்சாச்சா?
சுசீ டிவியை ஆப் பண்ணிடு
சுசீ மணி எட்டாச்சு குழந்தைக்கு சோறு போட்டுரு
.
சுசீ படுக்கையைப்போடு
சுசீ அடுப்படியிலே என்ன பன்ற சீக்கிரம் வா லைட் ஐ அனைச்சிட்டு படுக்க வா
சுசீ சீக்கிரம் எழுப்புனு சொன்னேன்ல
சுசீ எங்கே போய் தொலைந்த சனியனே
ஏய் சுசீ இங்க இருக்கியா... போச்சுடா... உக்காந்தாச்சா ... மூனு நாள் ஜெபமா
இப்படி 50 கதைகள் உள்ள இந்தப் புத்தகத்தை வாங்கி அவசியம் படிக்க வேண்டும்.
தோழமையுடன்,
க.ஷெரீப்,
சிவகாசி.