வங்கிகள் இஎம்ஐ பிடிப்பது தவறு - மத்திய மந்திரி - ஆசிரியர் மலர்

Latest

30/05/2020

வங்கிகள் இஎம்ஐ பிடிப்பது தவறு - மத்திய மந்திரி


புதுடெல்லி,
நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, மே 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். தினக் கூலி தொழிலாளர்கள், மாத சம்பளதாரர்கள் என, அனைத்து தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வாடகை, மின்சார கட்டணம் போன்றவற்றை கூட செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். மேலும் பலர், அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடுகின்றனர்
.வங்கிகளில், வீடு, வாகனம், கல்வி ஆகியவற்றுக்காக கடன் வாங்கியவர்கள், இந்த மாத, இ.எம்.ஐ., எப்படி செலுத்துவது என கவலையில் ஆழ்ந்திருந்தனர். இதையடுத்து, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் 6 மாதங்களுக்கு, இ.எம்.ஐ., செலுத்தத் தேவையில்லை’ என, ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்த விஷயத்தில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்குவதற்கும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகையை வாடிக்கையாளர்கள் எப்படி பெறுவது என்ற சந்தேகத்தை தீர்ப்பதற்கும், எந்த வங்கியும் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில், வீடு, வாகனம், கல்விக் கடன் வாங்கியவர்களுக்கு, சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்து, இந்த மாத, இ.எம்.ஐ., பிடித்தம் செய்யப்பட உள்ளது. எனவே, போதிய அளவு தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருங்கள்’ என, நினைவூட்டல், எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது.
இது, கடன் வாங்கியவர்களிடையே, குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அறிவித்தபடி, 6 மாதங்களுக்கான கடன் தவணையை செலுத்த முடியாதவர்கள், ‘இ.எம்.ஐ., பிடித்தத்தை ஒத்தி வைக்க வேண்டும்’ என, கடன் வாங்கிய வங்கிகளுக்கு, முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்; இல்லையெனில், கடன் வாங்கியவர்களின் கணக்கிலிருந்து, அதற்கான தொகை, தானாகவே பிடித்தம் செய்யப்படும்.ஒத்திவைப்பு இந்த 6 மாத, இ.எம்.ஐ., தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறதே தவிர, ரத்து செய்யப்படவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது எனவும், அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459