மக்கள் உயிர் தான் முக்கியமே தவிர .....வருமானம் அல்ல... - ஆசிரியர் மலர்

Latest

14/05/2020

மக்கள் உயிர் தான் முக்கியமே தவிர .....வருமானம் அல்ல...



TASMAC Case: டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளில் அரசுத்தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதித்தது. ஆனால், இந்த நிபந்தனைகளை மீறியதால், தமிழகம் முழுவதும் 41 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு,
பிரதான வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, இன்னும் விசாரணைக்கு வராத நிலையில், மதுக்கடைகளை திறக்க தடை கோரிய தொடரப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடந்த இந்த விசாரணையில், மது பழக்கமும் ஒரு கொடிய நோய். ஏழை – எளிய மக்கள், தங்களின் வருமானத்தில் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றி கொள்ளாமல் மதுபான கடைகளுக்கு
செலவழிப்பதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஊரடங்கு காலத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரிக்கிறது. தனி மனித இடைவெளி கடைபிடிக்க டாஸ்மாக் முழுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அதேசமயம், டிஜிட்டல் முறையை பின்பற்றுவதற்கான நடைமுறைகளை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 500 டோக்கன் நடைமுறையை பின்பற்ற உள்ளதாகவும், மதுபான விற்பனை நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறது என்று தமிழக அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு தேவையான மென்பொருள் மற்றும் செயலியை வழங்க தயாராக
இருப்பதாக ஹிப் பார் என்ற நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மட்டுமே பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசுத்தரப்பில் விரிவான பதில்மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதற்கு அரசுத்தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள், நாளைக்கு தள்ளிவைத்துள்ளனர்.
விசாரணையின் போது, தமிழகத்தில் 50 ஆண்டுகள் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், தற்போது ஏன் அமல்படுத்த முடியவில்லை எனவும், அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக இருக்கும் நீதிமன்றம், பொது அமைதியும், சட்டம் – ஒழுங்கும் சீர்குலைந்தால் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
டாஸ்மாக் பதில்மனுவில், 12 கடைகளில் மட்டும் தான் பிரச்னை எழுந்ததாக கூறப்பட்டுள்ளது..
ஆனால், 170 கோடி ரூபாய் எப்படி வசூல் எப்படி வந்தது என்பன உள்ளிட்ட கேள்விகளையும் எழுப்பினர்.
முழுமையான மதுவிலக்கை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரர்களும் அக்கோரிக்கையை எழுப்பவில்லை எனத் தெரிவித்தனர். மக்கள் உயிர் தான் முக்கியமே தவிர, வருமானம் அல்ல எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459