New
ஏப்ரல் மாத ஊதியம் தராததால் புதுச்சேரியில் நகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கரோனா தடுப்புப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ளன. இதனிடையே உழவர்கரை நகராட்சி ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் நகராட்சி ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில், நிலுவையில் உள்ள கடந்த மாத ஊதியத்தை வழங்காததைக் கண்டித்து 100க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் நகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பு இன்று (மே 4) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து ஊதியத்தை வழங்கக் கோரி அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், “புதுச்சேரி நகராட்சியில் 600க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார அதிகாரி, திட்டப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கரோனா பணிகளை அதிக முக்கியத்துவம் கருதி கடுமையாக பணியாற்றினோம். ஆனால், ஊதியம் தராதது கண்டிக்கத்தக்கது. இதனால் பணிகளைப் புறக்கணித்துள்ளோம்” என்றனர்.
பணி புறக்கணிப்புப் போராட்டத்தால் கிருமிநாசினி தெளிப்பு உட்பட கரோனா தடுப்புப் பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபடவில்லை. தளர்வால் கடைகள் திறக்கப்பட்டுள்ள சூழலில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடாததால் நோய்த் தொற்று அபாயம் புதுச்சேரியில் அதிகரித்துள்ளது.