ஆயுர்வேத மருந்துகள் நல்ல பலன்களை தந்துள்ளது - கேரள முதலமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

16/04/2020

ஆயுர்வேத மருந்துகள் நல்ல பலன்களை தந்துள்ளது - கேரள முதலமைச்சர்


திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய மாநிலம் கேரளம்தான் என முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம் தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும்  காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,380 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 941 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 37 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் முதன்முறையாக கேரள மாநிலத்தில் கால் பதித்த கொரோனா வைரஸ் கதகளி ஆடிவந்தது. மாநில அரசின் போர்கால நடவடிக்கையினாலும், சுகாதாரத்துறையின் தீவிர முயற்சியினாலும் தற்போது, கேரள  மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர். புதிதாகக் கொரோனா பாதிப்புக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, கொரோனாவால் புதிதாகப்  பாதிக்கப்படுபவர்களின்
எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும், குணமடைந்து வீடு செல்பவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலும் உள்ளன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநிலம் முழுவதும் 387 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 167 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை, 218 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா பாதித்ததில், 264 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்; 8 பேர் வெளிநாட்டினர். 114 பேருக்குத் தொடர்பு மூலம்  கொரோனா ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது, 97,464 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 522 பேர் மருத்துவமனைக் கண்காணிப்பில் உள்ளனர்.
பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து வருகிறோம். கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்குகிறோம். அது நல்ல பலனை அளித்து  வருகிறது. இதனால், 56 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர். விரைவில் 100 சதவீத நோயாளிகளைக் குணப்படுத்துவோம்
. இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய மாநிலமாக கேரளம் மாறியுள்ளது என்று  தெரிவித்தார்.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2916 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர். 295 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 1578 பேருக்கு தொற்று பாதிப்புடன் டெல்லி 2ம்  இடத்தில் உள்ளது. 32 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த வாரம் வரை இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம் இந்த வாரம் முதல் 3-ம் இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் 1242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி   செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கிடையே, உலகளவில் கொரேனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 60 -வது இடத்தில் இருந்த இந்தியா 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது  குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459