ஊரடங்கு உத்தரவால் மன அழுத்தம் அதிகரிப்பதை தவிர்ப்பது எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

 




26/04/2020

ஊரடங்கு உத்தரவால் மன அழுத்தம் அதிகரிப்பதை தவிர்ப்பது எப்படி?


வேலூர்: ஊரடங்கு உத்தரவால் மன அழுத்தம் அதிகரிப்பதை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து மன நல மருத்துவர்கள் அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மக்கள் வீட்டில் அடைந்துள்ளனர். அபாயத்தை உணராமல் தேவையின்றி சுற்றித்திரிந்து கொண்டிருப்பவர்களின் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் வெளியே சுற்றித்திரிபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், வீடுகளிலேயே முடங்கி கிடப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட மன நல மருத்துவர்கள் அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மன நலத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமாரியிடம் கேட்டபோது:ஊரடங்கு உத்தரவால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என இருபாலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பொருளாதார வசதி படைத்தவர்களும், ஏழைகளும் பாகுபாடின்றி பாதிப்படைவதுதான் உண்மை.
இதனால் ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்க பொருளாதார அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நடவடிக்கைகளை கையாள வேண்டும்.
இதில் பெண்கள் வீட்டு வேலைகளை கவனித்து வருவதால், மன ரீதியான பாதிப்பில் இருந்து ஓரளவு விடுபடுவார்கள். ஆனால், அனைவரும் வீட்டில் இருப்பதால் கூடுதலாக வேலைகள் செய்ய வேண்டியிருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களும் வீட்டு வேலைகளை கவனிப்பதால், தற்போது பாரம் குறைந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான ஆண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்வதை கவுரவக்குறைவாக நினைப்பார்கள். தற்போது வேலைக்கும் செல்லாமல் இருப்பதால் பொழுது போகாமல் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இதுபோன்ற மன அழுத்தத்தில் இருந்து விடுபட வீட்டு வேலைகளை கவனிப்பதில் ஆண்கள் தாங்களாகவே அக்கறை காட்ட வேண்டும். இதன் மூலம் தம்பதியினரிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். அதேபோல் குழந்தைகளை தாய், தந்தை இருவரும் சேர்ந்து கவனித்துக் கொள்வதால் குடும்ப பாசப்பிணைப்பு உருவாகும். ஆண்களுக்கு ஏற்படும் மன அழுத்தமும் குறையும். வீட்டில் தோட்டங்களை பராமரிப்பது, வீட்டை சுத்தம் செய்து அழகு படுத்துவது போன்றவற்றில் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும்.
வேலைக்கு செல்லும்போது, நேரம் இல்லை என்று கூறிக்கொண்டு தட்டிக் கழித்த வேலைகளை இப்போது நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
தற்போது ஆன்லைனில் கல்வி கற்கும் நடைமுறை கொண்டுவரப்படுகிறது. இதனால் வகுப்பை மாணவர்கள் சரியாக கவனிக்கிறார்களா? என்பதை பெற்றோர் நேரடியாக கண்காணிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மாணவர்களின் கல்விக்கு தேவையான வேறு ஆன்லைன் வசதிகளையும் செய்து கொடுக்கலாம். சேல்ஸ் மேன், இன்ஜினியர்கள் உட்பட விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தற்போது ஊரடங்கு உத்தரவு என்பது வேதனையாக இருக்கும். வீட்டில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்போதுதான் வாழ்க்கையின் எதார்த்தம் புரியும். வீட்டில் உள்ள வேலைகளை கவனிக்க வேண்டியதில் அக்கறை காட்டாமல்
தட்டிக் கழிப்பதும் ஒருவிதமான மன அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற ஆரம்ப கட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் அடுத்தகட்டமாக வீட்டில் உள்ளவற்றை தூக்கிப்போட்டு உடைப்பது, சாதாரண விஷயங்களுக்கு கோபப்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதற்கு மன நல ஆலோசனை பெறுவது அவசியம்.
ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் சம்பாதிக்க முடியவில்லை என்பதில் பெரும்பாலும் மன அழுத்தம் அதிகரிக்கும். அதேபோல் ஆட்டோ டிரைவர்கள், கூலித்தொழிலாளிகள் உட்பட குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் வேறு தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். யாராக இருந்தாலும்
ஒரே ஒரு தொழிலை நம்பி பிழைக்காமல், பல தொழில்களை கற்றுக்கொண்டு அறிவையும், திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இதுபோன்ற நடவடிக்கைகளால் நம்முடைய பொருளாதாரம் உயரும். எதிர்காலத்தில் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தாலும், ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் நம்மால் சமாளிக்க முடியும். கம்பெனிகள், தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளின்போதும் நாம் தளராமல் இருப்பதற்கு நம்முடைய கைத்தொழில் மற்றும் திறமை மட்டுமே கைகொடுக்கும்.
மாணவர்கள் ஐஏஎஸ், நீட் போன்ற தேர்வுகளுக்கு படிப்பதற்கு இந்த ஊரடங்கு நல்ல வாய்ப்பு என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். இதேபோல் பல்வேறு படிப்புகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளலாம்.
இவைகளுக்கு பெற்றோர் ஒத்துழைப்பு அவசியம். மாணவர்களை வீட்டில் தொந்தரவு செய்யும் வகையிலான நடவடிக்கைகளை தவிர்ப்பது அவசியம்.வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் மக்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிர்த்துவிடுகின்றனர். ஆனால் சுய கட்டுப்பாட்டை இழப்பதால், ஊரடங்கு உத்தரவு தனிமனிதனின் சுதந்திரத்தை பறிப்பதாக நினைக்கின்றனர். சுய கட்டுப்பாடுடன்
வாழ்ந்தால், மன அழுத்தம் போன்றவை ஏற்படாது. கொரோனா தடுப்பதில் அனைவருக்கும் கடமை இருப்பதை உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
காக்னிடிவ் பிஹேவியர் தெரபி சிகிச்சை
தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆங்கிலத்தில் ‘காக்னிடிவ் பிஹேவியர் தெரபி’ என்று அழைக்கப்படும் சிகிச்சை அளிக்கப்படுவதாக மன நல மருத்துவர் செந்தில்குமார் தெரிவித்தார். இதுகுறித்து கூறுகையில், ‘தாழ்வு மனப்பான்மை, நாம் பூமிக்கு பாரமாக இருக்கிறோம். நம்மால் எதுவும் செய்ய முடியாது, நம்மை அனைவரும் வெறுக்கின்றனர் என்பது போன்ற எண்ணங்கள் தற்ெகாலை முயற்சிக்கு காரணமாக அமைகிறது.
ஆனால் ஒவ்வொருவரும் சாதனை படைக்கின்றனர் என்பதே உண்மை. ஆனால், அவர்களின் சாதனையை அறிந்து கொள்வதில்லை. உதாரணமாக 10ம் வகுப்பு படிக்கும்போது ஒருவர் 4ம் வகுப்பு மாணவனுக்கு பாடம் சொல்லி கொடுத்திருக்கலாம். பசியால் துடித்து கொண்டிருந்தவருக்கு ஒரு வேளை சாப்பாடு போட்டியிருக்கலாம்.
இதுபோன்ற செயல்களை யாரும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை.
இவைகளை நினைவுப்படுத்தி எழுத வைத்து தினமும் படிக்க வைப்பதே காக்னிடிவ் பிஹேவியர் தெரபி சிகிச்சை. இதன் மூலம் அவர்களது தாழ்வு மனப்பான்மை நீங்கும். அடுத்ததாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். அனைவரும் டைரியில் மற்றவர்களுக்கு செய்யும் உதவிகளையும், சாதனைகளையும் எழுதி வைத்து படித்து தங்களுக்குள் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். ஊரடங்கு நாளில் இதுபோன்றவற்றை நினைவுப்படுத்தி பார்ப்பதால்
மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்’ என்றார்.
* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என இருபாலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* மன அழுத்தத்தில் இருந்து விடுபட வீட்டு வேலைகளை கவனிப்பதில் ஆண்கள் தாங்களாகவே அக்கறை காட்ட வேண்டும்.
* வீட்டில் தோட்டங்களை பராமரிப்பது, வீட்டை சுத்தம் செய்து
அழகு படுத்துவது போன்றவற்றில் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும்.
* மாணவர்கள் ஐஏஎஸ், நீட் போன்ற தேர்வுகளுக்கு படிப்பதற்கு இந்த ஊரடங்கு நல்ல வாய்ப்பு என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்
* வேலைக்கு செல்லும்போது, நேரம் இல்லை என்று கூறிக்கொண்டு தட்டிக் கழித்த வேலைகளை இப்போது நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
* விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தற்போது ஊரடங்கு
உத்தரவு என்பது வேதனையாக இருக்கும்.
* அடுத்தகட்டமாக வீட்டில் உள்ளவற்றை தூக்கிப்போட்டு உடைப்பது, சாதாரண விஷயங்களுக்கு கோபப்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
* சுய கட்டுப்பாடுடன் வாழ்ந்தால், மன அழுத்தம் போன்றவை ஏற்படாது. கொரோனா தடுப்பதில் அனைவருக்கும் கடமை இருப்பதை உணர வேண்டும்.
* ஆட்டோ டிரைவர்கள்,
கூலித்தொழிலாளிகள் உட்பட குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் வேறு தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். யாராக இருந்தாலும் ஒரே ஒரு தொழிலை நம்பி பிழைக்காமல், பல தொழில்களை கற்றுக்கொண்டு அறிவையும், திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459