தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிடும் அறிவிப்பு பின்பற்றப்படும் - . தமிழக தலைமைச் செயலர் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிடும் அறிவிப்பு பின்பற்றப்படும் - . தமிழக தலைமைச் செயலர்


தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிடும் அறிவிப்பு பின்பற்றப்படும் என தமிழக தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலர் சண்முகம் இதுபற்றிய தகவலை வெளியிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்ததாவது:
“இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். தற்போதைய சூழலில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதல்வர்கள் கோரிக்கை வைத்தனர். ஒருவேளை நீட்டிக்கப்படாவிட்டால் இதுவரை எடுத்த முயற்சிகளில் வெற்றி பெற முடியாது எனவும் முதல்வர்கள் வலியுறுத்தினர்.

தமிழக முதல்வரும் பல்வேறு வல்லுநர்களைக் கேட்டறிந்து தமிழகத்திலும் 2 வாரங்களுக்காவது ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எடுத்துரைத்தார். பிரதமர் பல்வேறு முதல்வர்களின் கருத்தைக் கேட்டு அறிவுரையும் வழங்கியிருக்கிறார். ஆரோக்கிய சேது செயலியை மக்கள் பரவலாக பயன்படுத்துவது குறித்து மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஏற்ப பச்சை, மஞ்சள், மற்றும் ஆரஞ்சு நிறம் என மூன்று வகையாகப் பிரித்து நோய்த் தொற்றுக்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.
வல்லுநர்கள் தெரிவித்த கருத்தையும், பிரதமர் மற்றும் பிற மாநில முதல்வர்கள் கூறிய கருத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அமைச்சரவையில் எடுத்துரைத்தார்.
ஊரடங்கு ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்படுத்தினால், அதற்கான முழு பலன் கிடைக்காது.
எனவே, நாடு தழுவிய அளவிலான முடிவை பிரதமர் அறிவிக்க வேண்டும் என்கிற சூழலைக் கருத்தில் கொண்டு பிரதமர் எவ்வாறு அறிவிக்கிறாரோ அதை முழுமையாக ஏற்று செயல்படுத்துவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், கடந்த 21 நாள்களாக பொது மக்கள் ஊரடங்குக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு பாராட்டுகளும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.” என்றார்.
இதனிடையே, ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு 8 மணிக்கு உரையாற்றுவார் என்று தெரிவித்த தலைமைச் செயலர், பிறகு பிரதமர் உரை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் விளக்கினார்.