மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் விடுத்த உத்தரவுகள் என்னென்ன? - ஆசிரியர் மலர்

Latest

29/04/2020

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் விடுத்த உத்தரவுகள் என்னென்ன?


தமிழகத்தில் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் பழனிசாமி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற பகுதிகளில் கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை என்பது ஒரு பெரிய நகரம் என்பதாலும் குறுகிய தெருக்கள் உள்ள பகுதிகள் அதிகம் என்பதாலும் கொரோனா தொற்று அதிகமாக பரவுகிறது.
மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைத்துள்ளது.
அதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். மே மாதத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் தேதி மற்றும் நேரத்தை பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். காய்கறிக் கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றப்படுவதில்லை. எண்ணெய், ஜவ்வரிசி, முந்திரி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற ஆட்சியர்கள் உதவ வேண்டும்.
நோய் பரவலை தடுக்க நகரப்பகுதிகளில் தினந்தோறும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். தவறாமல் அதை செயல்படுத்த வேண்டும். நகரப்பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் சில தொழில்களுக்கு தளர்வு வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்கும். கொரோனா குறைந்த, பச்சை பகுதிகளில் தொழில் தொடங்க அரசு தரும் அறிவுரைகளை ஏற்று ஆட்சியர் செயல்படலாம். வேளான் சார்ந்த தொழில்கள் மற்றும் விளைபொருட்கள் கொண்டு செல்வதை யாரும் தடுக்கக்கூடாது.
முகக்கவசம், தனிநபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைதிட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதிக ஆட்கள் இருந்தால் 2 அல்லது 3 குழுவாக பிரித்து பணி வழங்க வேண்டும். 100 நாள் வேலைதிட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றுவது தவிர்க்கப்பட வேண்டும்.
55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு பணி தரலாம்” எனத் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459