இந்திய அளவில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக தினமும் குறைந்தது 50 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா உறுதி ஆகி பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் சென்னையில் பலியான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்திருக்கிறது.


இதனிடையே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பாதிப்பின் அளவுகளின் அடிப்படையில் மூன்றாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.  மூன்று வண்ணங்கள் அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட மாவட்ட வாரியான கொரோனா பாதித்தவர்களின் பட்டியல் மூன்று வண்ணங்களாக பிரித்து வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி பாதிப்பு அதிகமிருக்கும் 17 மாவட்டங்கள் சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்கள் அனைத்திலும் கொரோனா பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 20க்கு மேல் இருக்கிறது. சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிபேட்டை, திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்கள் சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது
.

அதற்கு அடுத்தபடியாக திருப்பத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சேலம், திருவாரூர், விருதுநகர், தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்கள் ஆரஞ்சு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இறுதியாக பாதிப்பு குறைந்த மாவட்டங்களான நீலகிரி, காஞ்சிபுரம், சிவகங்கை, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகியவற்றுக்கு மஞ்சள் நிறக் குறியீடு கொடுக்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் தமிழகத்தில் 38 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் இதுவரை 34 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நான்கு மாவட்டங்களான புதுக்கோட்டை, தருமபுரி,கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன