வீட்டு கண்காணிப்பில் இருந்த வெளிநாட்டினர் 3 பேர் பூந்தமல்லியில் சுற்றி திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உடனே சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்களை அழைத்துச்சென்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட செல்கிறது. இதுவரை 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த  ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆகையால்,  வைரஸ் பரவாமல் இருக்க மத்திய மற்றும்  மாநில அரசுகள்  பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வருபவர்களை பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்தில் 24 மணி நேரம் கண்காணித்து அனுப்பி வைக்கப்பட்டு வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் 14 நாட்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வெளியே வரக் கூடாது எனவும் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேர் சாவகாசமாக கடைகளில் சென்று பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து  உடனே சுகாதார துறை அதிகாரிகளுக்கு
தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சுகாதார துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்
என்பதும் கூடப்பாக்கத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வந்ததும். கடந்த சில தினங்களாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் தற்போது உணவு இல்லாமல் உணவு பொருட்களை வாங்குவதற்காக வெளியே வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பரிசோதனை செய்த சுகாதார துறை அதிகாரிகள் மீண்டும் வீட்டில் தனிமைப்படுத்த சுகாதாரத் துறையினர் அழைத்துச் சென்றனர். இதனால் பூந்தமல்லி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.