புதிதாக 7 கலைக்கல்லூரிகள் அடுத்த ஆண்டு முதல் செயல்படும்- முதல்வர் - ஆசிரியர் மலர்

Latest

 




21/03/2020

புதிதாக 7 கலைக்கல்லூரிகள் அடுத்த ஆண்டு முதல் செயல்படும்- முதல்வர்

சென்னை:
சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டுறவுத்துறை சார்பில் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன். மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை வினியோகிக்கும் பொருட்டு, 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு நவீன வங்கி சேவையினை அளிக்கும் பொருட்டு, 95 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கங்கள், 6 மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், ஒரு நகரக் கூட்டுறவு வங்கி, ஒரு நகர கூட்டுறவுக் கடன் சங்கம், ஒரு தொடக்க கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ஒரு பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கம் என மொத்தம் 105 கூட்டுறவு கடன் நிறுவனங்களுக்கு, 27.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்த அலுவலக கட்டிடங்கள் கட்டப்படும்.
வணிக வங்கிகளுக்கு இணையாக, புதிய வசதிகளுடன் கூடிய நவீன வங்கிச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிட ஏதுவாக, 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மத்திய கூட்டுறவு வங்கிகள், 3 நகர கூட்டுறவு வங்கிகள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஒரு தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி என மொத்தம் 95 கூட்டுறவு நிறுவனங்கள், 14.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
காஞ்சீபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சென்னை, தண்டையார்பேட்டையில் அந்நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள இடத்தில் 5.65 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், காஞ்சீபுரம் நகரிலுள்ள மற்றொரு இடத்தில் 4.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் 2 திருமண மண்டபங்கள் கட்டப்படும். அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மக்களின் வரவேற்பினை பெரியளவில் பெற்றுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 189 அங்காடிகள் கூடுதலாக துவங்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் இயற்கை காரணங்களினால் மூடாதவாறு இருக்க, 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடலூர் மாவட்டம் அன்னன்கோவிகாஞ்சீபுரம் மாவட்டம், புது குப்பம் மற்றும் உய்யாலி குப்பம் கிராமங்களில், 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.
1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும். மேலும், 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகவும், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகளாகவும், 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் கால்நடை மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படும் முதல்தர சேவைகள் வழங்கும் கால்நடை பன்முக மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.
கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பை வணிக ரீதியில் மேற்கொள்ளும் 1,925 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தலா 1,000 கோழிக் குஞ்சுகள், ஒரு மாதத்திற்கான கோழித் தீவனம் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்துக் கொடுக்க 14.73 கோடி ரூபாய் வழங்கப்படும்.
விவசாயிகளின் பொருளாதார இழப்பினைத் தவிர்க்கும் வகையில், 90.35 லட்சம் கால்நடைகளுக்கு 22.03 கோடி ரூபாய் செலவில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்.
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், கிராமப்புற மாணவர்கள் பயன் பெறவும், உயர் கல்வித்துறை மூலம் 7 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரிகள் செயல்படும். நான் 13.3.2020 அன்று பேரவையில், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ், பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்புகளில், வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 30 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தேன்.
தற்போது, பல்வேறு தரப்பினரிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு பதிலாக. 50 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், மேலும் 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும், வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459