அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம்: காலி பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




11/09/2024

அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம்: காலி பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை

 அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று டிஆர்பி தேர்வெழுதிய தேர்வர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 2,767 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை 21-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்திய இத்தேர்வை பல்வேறு மையங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் எழுதினர். இவர்கள் அனைவரும் ஏற்கெனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.


இந்நிலையில் போட்டித் தேர்வை நடத்தி ஒன்றரை மாதம் ஆகியும் இன்னும் உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) வெளியிடப்படவில்லை. இதை உடனடியாக வெளியிட வேண்டும். காலியிடங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று டிஆர்பிக்கு தேர்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இதுதொடர்பாக தேர்வர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் 1,768 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கை 2,768 ஆக உயர்த்தப்பட்டது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிந்து ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. இன்னும் கீ ஆன்ஸரை கூட வெளியிடாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் தாமதம் செய்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தேர்வு முடிந்து ஒரே வாரத்தில் கீ ஆன்ஸர் வெளியிடப்பட்டுவிடும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளில் மட்டும் கீ ஆன்ஸர் வெளியிடவே மாதங்கள் ஆகிவிடுகின்றன.


அரசு நிர்ணயித்துள்ள ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தின்படி அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இதற்காக தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் எதுவும் நடைபெறவில்லை.


எனவே, காலியாகவுள்ள 8 ஆயிரம் பணியிடங்களையும் தற்போது நடந்துள்ள போட்டித் தேர்வை கொண்டு நிரப்ப தொடக்க கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வெழுதியவர்கள் அனைவருமே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். காலியிடங்களை அதிகரித்தால் கூடுதல் ஆசிரியர்கள் பணிவாய்ப்பு பெறுவர். எனவே, அடுத்தடுத்து புதிய ஆசிரியர்களை தேர்வு செய்வதில் ஏற்படும் காலவிரயம் தவிர்க்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459