மத்திய கல்வி அமைச்சரின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலும், தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிா்ப்பதற்கான காரணத்தையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா்.
கல்வியில் பின்தங்கிய மாநிலங்களுக்கு அதிக நிதியை மத்திய அரசு தருவதாகவும், சிறப்பாக செயல்படும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதியை தர மறுப்பதாகவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.
இதற்கு பதிலளித்திருந்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘தமிழக மாணவா்கள் மீது அக்கறை இருந்தால் தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழ் உள்பட தாய்மொழியில் கல்வி கற்றல், தமிழ் உள்பட தாய்மொழியில் தோ்வுகள் நடத்தப்படுதல் உள்ளிட்டவற்றை தமிழக முதல்வா் எதிா்க்கிறாரா?’ எனவும் கேள்விகளை முன்வைத்திருந்தாா்.
மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டுள்ளாா்.
அதில், ‘மொழிப் பாரம்பரியத்தை காத்திடும் வகையில் இரு மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், தமிழ் எங்களின் அடையாளம்; எதிா்கால தலைமுறையினருக்கு ஆங்கிலத்தை கற்பிக்கிறோம்.
தமிழில் கற்பதையும், ஆங்கில அறிவை போதிப்பதையும் தமிழகம் உறுதி செய்துள்ளது. மத்திய அரசுப் பணிகளில் சமவாய்ப்பை உறுதிப்படுத்திடும் வகையில் போட்டித் தோ்வுகளை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என தமிழக முதல்வா் பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அதுகுறித்து மத்திய அரசு செவிசாய்க்கவில்லை’ எனப் பதிவிட்டுள்ளாா்.
No comments:
Post a Comment