மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய மாவட்ட அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




13/09/2024

மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய மாவட்ட அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவு

1310435

அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டுமென மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் முழு விவரங்களும் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) தளம் வழியாக சேகரிக்கப்பட்டு பள்ளிக்கல்வித் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தளத்தில் உள்ள மாணவர் எண்ணிக்கை அடிப்படையில்தான் பாடநூல், மிதிவண்டி, காலணி, சீருடைகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளிக்கான பராமரிப்பு மானியமும் மாணவர்கள் அளவுக்கு ஏற்பவே ஒதுக்கப்பட்டு வருகிறது.


இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளம் அரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த புகார் மீதான ஆய்வில், போலியாக கணக்கு காட்டியுள்ளது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் தவறிழைத்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அதன் வட்டாரக் கல்வி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இதையடுத்து அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டுமென மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி எமிஸ் தளத்தில் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை உறுதிசெய்ய வேண்டும். அதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் அதன் தகவல்களை இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டுமென துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459