இளநிலை யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கு வரும் 23-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.
தமிழக அரசின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த 2 அரசு கல்லூரிகளிலும் 160 இடங்கள் உள்ளன. 16 தனியார் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,500 இடங்களில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 960 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 540 இடங்கள் உள்ளன.
யோகா, இயற்கை மருத்துவ பட்டப் படிப்பு (பிஎன்ஒய்எஸ்) ஐந்தரை ஆண்டுகள் கொண்டது.பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் இதற்கு சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், 2024-25-ம்கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் நடந்தது. இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, மாணவ, மாணவிகள் தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு2,320 பேர் விண்ணப்பித்த நிலையில், 2,243 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு1,187 பேர் விண்ணப்பித்த நிலையில், 1,173 விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன.
இந்நிலையில், தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல்களை அரும்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 19-ம் தேதி மாலை வெளியிட்டார். தமிழக அரசின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை இயக்குநர் விஜயலட்சுமி, இணை இயக்குநர்கள் பார்த்திபன், மணவாளன், மாணவர் தேர்வு குழு செயலர் கிருஷ்ணவேணி உடனிருந்தனர். தரவரிசை பட்டியலில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பிரிவில் விழுப்புரம் மாவட்டத்தின் அப்சர் பேகம் (கட்ஆஃப் 198.50), நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பிரிவில் கோவை மாவட்டத்தின் ஜெயசிவனிதா (கட்ஆஃப் 195) ஆகிய மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனை வளாகத்தில் யோகா, இயற்கை மருத்துவ பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 23-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாளில் சிறப்பு பிரிவினர், 24-ம் தேதி பொது பிரிவினர், 26, 27-ம் தேதிகளில் நிர்வாகஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட படிப்புகள்போல, யோகா, இயற்கை மருத்துவ பட்டப்படிப்புக்கும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கினால் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment