போக்சோ சட்டம் பற்றிய காணொலிகளை பள்ளிகளில் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




07/08/2024

போக்சோ சட்டம் பற்றிய காணொலிகளை பள்ளிகளில் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

 

 

1291620

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு காணொலிகளை பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு திரையிட்டுக் காட்ட வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


நம்நாட்டில் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான பேச்சு, செயல்பாடு, பார்வை உட்பட துன்புறுத்தல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுதர முடியும். போக்சோ சட்டம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மாநில அரசுகள் சார்பில் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் போக்சோ சட்டத்தை எளிமையாக விளக்கும் வகையில் சில காணொலிகளை உருவாக்கியுள்ளது. அவை யுடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் வலைத்தள முகவரிகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.


இந்த காணொலிகளை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மத்தியில் திரையிட்டு போக்சோ சட்டம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுசார்ந்து தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இயக்குநரகத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.


இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459