அரசுப் பணிகளில் நியமனம் செய்ய ஓராண்டு முதுகலை பட்டப்படிப்பானது செல்லும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பிளஸ் 2 முடித்த பிறகு இளகலை பட்டப்படிப்பு மூன்றாண்டு முடித்துவிட்டு ஓராண்டு முதுகலை பட்டப்படிப்பு முடித்த மனுதாரரை தட்டச்சர் பணியில் நியமிக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு(டிஎன்பிஎஸ்சி) உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஓராண்டு முதுகலை பட்டப்படிப்பானது தகுதியற்றதாக கூறிய டிஎன்பிஎஸ்சி
, மனுதாரருக்கு அரசுப் பணியை வழங்க மறுத்தது.
பரந்தாமன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரத சக்கரவர்த்தி நடத்திய விசாரணையில் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது பேசிய நீதிபதி, “பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி, முதுகலை சட்டம் மற்றும் முதுகலை நூலக அறிவியல் போன்ற ஓராண்டு பட்டப்படிப்புகள் செல்லுபடியாகும் படிப்புகளாக உள்ளன. எனவே மனுதாரரின் முதுகலை நூலக பட்டப்படிப்பை செல்லாதது என நிராகரிக்க முடியாது.” எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டத்தின் 25-வது பிரிவைக் குறிப்பிட்டு, பத்தாம் வகுப்பு + பிளஸ் 2 என்ற அடிப்படைப் பள்ளிக் கல்வி கூட இல்லாமல் நேரடி முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களை நீக்குவதே இந்த விதியின் நோக்கம் என்றும், முதுகலை பாடத்தின் கால அளவைப் பற்றியது அல்ல என்றும் நீதிபதி அடிக்கோடிட்டுக் கூறினார்.
No comments:
Post a Comment