முன்னுரிமையின்படி 43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்ற 329 நபர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில் எமிஸ் தளம் வழியாக நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்க இறுதி முன்னுரிமைப் பட்டியலில் 1 முதல் 175 வரையில் இடம் பெற்றிருந்த அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவர்களில் 174 தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வில், முன்னுரிமையின்படி 43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கான பணியேற்பு குறித்த அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment