பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை: பணி நிரந்தர எதிர்பார்ப்பில் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் - ஆசிரியர் மலர்

Latest

23/06/2024

பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை: பணி நிரந்தர எதிர்பார்ப்பில் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள்

1268683

சட்டப்பேரவைக்கூட்டத்தொடரில் நாளை மறுநாள் (24ம் தேதி) நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்க இருப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


அரசு பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு கடந்த ஜனவரி முதல் ரூ.2500 உயர்வு அளித்து தற்போது ரூ.12,500 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இத்தொகை 10,000, ரூ.2500 என இரு பரிவர்த்தனையாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதம் ரூ. 10 ஆயிரம் மட்டுமே பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.


எஞ்சிய ரூ.2500 இதுவரை வழங்கப்படவில்லை. இத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இனிமேல் சம்பளத்தை தனித் தனி பரிவர்த்தனைகளாக இல்லாமல் மொத்தமாக ஒரே பரிவர்த்தனையில் வழங்க வேண்டும். மேலும், மருத்துவ காப்பீடு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.


உடல் நல கோளாறு, விபத்து உள்ளிட்ட காரணங்களால் மரணம் அடையும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த மருத்துவ காப்பீடு பாதுகாப்பாக இருக்கும்.


பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு மே மாதமும் சம்பளம் வழங்க முன்வர வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் மட்டுமே தற்போது எழுந்து வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாக அமையும்.


எனவே நாளை மறுநாள் (24ம் தேதி) நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்த அனைத்து கட்சிக்கு வேண்டுகோள் விடுப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459