பள்ளிகளுக்கு அடுத்தடுத்து இமெயில் மூலம் வரும் வெடிகுண்டு மிரட்டல் !!! - ஆசிரியர் மலர்

Latest

05/03/2024

பள்ளிகளுக்கு அடுத்தடுத்து இமெயில் மூலம் வரும் வெடிகுண்டு மிரட்டல் !!!

 1210739

பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்ற போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி 13 தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய்களுடன் பள்ளிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.


எந்தஒரு மர்ம பொருளோ வெடிகுண்டு தொடர்புடைய பொருளோ சிக்காததால் வதந்தி மற்றும் புரளியை கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்து தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர்க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்துதுப்புத்துலக்க தொடங்கினர்.


பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மெயில் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வந்திருப்பதும், உரிய அங்கீகாரம் இல்லாத ஐடியிலிருந்து வந்திருந்ததும் தெரியவந்ததால் மிரட்டல் விடுத்தவரை அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது.


இதையடுத்து, குற்றவாளியை கைது செய்ய சர்வதேச போலீஸார் எனப்படும் இன்டர்போல் போலீஸாரின் உதவியும் நாடப்பட்டது. ஆனால், இதுவரை சாதகமான எந்த முடிவும் எட்டப்படவில்லை.


மேலும், மிரட்டல் விடுத்த நபரின் ஐபி முகவரிபல்வேறு நாடுகளில் மாறி மாறிகாட்டுவதால் அந்தந்த ஐபிமுகவரிகளை வாங்கி சென்னைபோலீஸார் தீவிரமாக விசாரணைநடத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், போரூர் அடுத்த மாங்காடு அருகே உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.


முன்னதாக, இந்த விவகாரம் போலவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூருவில் 15-க்கும்மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுக்கப்பட்டது.


இந்த இமெயில் விவரங்கள் குறித்து பெங்களூரு போலீஸார் கண்டுபிடித்த தகவலையும் பெற்று ஒரேநபர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.


மேலும், தமிழகத்தில் தொடர்ந்து இமெயில் மூலம் மிரட்டல் விடும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து வெடிகுண்டுமிரட்டல் தொடர்பான வழக்குகளையும் சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றலாமா என போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459