JEE முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: நெல்லை மாணவர் முகுந்த் பிரதீஷ் முழு மதிப்பெண் பெற்று சாதனை - ஆசிரியர் மலர்

Latest

14/02/2024

JEE முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: நெல்லை மாணவர் முகுந்த் பிரதீஷ் முழு மதிப்பெண் பெற்று சாதனை

 1199178

தேசிய முகமை தேர்வு நிறுவனம் நடத்திய ஜேஇஇ முதன்மை தேர்வில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். முகுந்த் பிரதீஷ் அகில இந்திய தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு பள்ளி இயக்குநர் மரகதவல்லி பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தமிழக மாணவர் முகுந்த் பிரதீஷ் உட்பட 23 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு,பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடத்தப்பட்டது.


இந்த தேர்வை நாடு முழுவதும் 544 மையங்களில் 11.70 லட்சம் பேர் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மாணவர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இத்தேர்வில் தமிழகமாணவர் முகுந்த் பிரதீஷ் உட்பட 23 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேபோல், எஸ்சி பிரிவு வாரியான தரவரிசையிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஆராதனா 99.99 சதவீதம் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரல் 4 முதல் 15-ம்தேதி வரை நடைபெற உள்ளது.


முழு மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்ற 23 பேரில் தமிழகத்தின் நெல்லையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷும் ஒருவர். இவரது தந்தை காந்த் தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். தாயார் ராம்சித்ரா தபால்துறையில் உதவியாளராக பணியாற்றி விருப்பஓய்வு பெற்றுள்ளார். பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் வசிக்கின்றனர்.


அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவர் முகுந்த் பிரதீஷை, பள்ளி இயக்குநர் மரகதவல்லி, தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளி முதல்வர்புஷ்பவேணி ஐயப்பன் உள்ளிட்டோர் பாராட்டினர். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


மாணவர் முகுந்த் பிரதீஷ் கூறும்போது, “எல்கேஜி தொடங்கி புஷ்பலதா பள்ளியில் படித்து வருகிறேன். வகுப்பில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை கவனமாக கேட்டு, அதன்படி படித்து வந்தேன். ஆசிரியர்கள் கூறும் அறிவுரைப்படி நடந்தால் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்.


அவர்கள் நடத்தும் பாடங்களை உன்னிப்பாக கவனித்து படித்தால் நல்ல மதிப்பெண் பெறமுடியும். அதற்கு நான் எடுத்துக்காட்டு. இதற்கென்று டியூஷனுக்கு செல்லவில்லை.


விடுமுறை நாட்களிலும் பொழுதை வீணாக கழிக்காமல் குறிப்பிட்ட நேரங்களில் படித்து வந்தேன்.எனக்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் உறுதுணையாக இருந்தனர். செமி கண்டக்டர் துறையில் பொறியாளராக விரும்புகிறேன் ” என்று தெரிவித்தார்.


இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகுந்த் பிரதீஷ் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேசிய அளவிலான தரவரிசையில் முன்னிலை பெற்று தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்துள்ளார். மாணவர் முகுந்த் பிரதீஷ் மற்றும் அவருக்கு உறுதுணையாக விளங்கிய பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மேலும், இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேலானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்’’ என்று கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459