தமிழகத்தில் பணிக்கு செல்லும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பை மருத்துவ சான்றிதழ் கோராமல் வழங்க வேண்டும் எனக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக மத்திய அரசை அணுக மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘மாதவிடாய் காலங்களில் பணிக்குச் செல்லும் பெண்கள் மனதளவிலும், உடல் அளவிலும் மிகுந்த சிரமத்துக் குள்ளாக நேரிடுகிறது. மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று. அதற்கு மருத்துவ சான்றிதழ் பெறுவது என்பது இயலாத காரியம்.
பிஹார் மாநிலத்தில் விடுப்பு: பிஹாரில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் காலகட்டங்களில் 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. இதேபோல கேரளாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும், சில தனியார் நிறுவன பெண்களுக்கும் இது போன்ற கால கட்டங்களில் விடுப்பு வழங்கப் படுகிறது. ஆனால் தமிழகத்தில் அது போன்ற நடைமுறை இல்லை. எனவே தமிழகத்திலும் மாத விடாய் கால கட்டங்களில் பெண் ஊழியர்களுக்கு எந்த மருத்துவ சான்றிதழும் கோராமல் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி அமர்வு: இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ர வர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் , பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பாக கொள்கை வகுக்கும் படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்
, இது தொடர்பாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை அணுக ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே மனுதாரரும் மத்திய அரசை அணுகலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment