தேர்வு நாளில் மற்றும் தேர்வு அறையில் என்ன செய்ய வேண்டும்? - ஆசிரியர் மலர்

Latest

14/02/2024

தேர்வு நாளில் மற்றும் தேர்வு அறையில் என்ன செய்ய வேண்டும்?

 1198412

1. தேர்வுக்கு கிளம்பும்போது வீட்டிலேயே அனைத்து பொருட்களும் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொண்ட பின் கிளம்புங்கள்.


2. காலை உணவை கட்டாயம் சாப்பிடுங்கள் இல்லையெனில் சோர்வு உங்களை தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடும்.


3. தேர்வு மையத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்னரே சென்று விடுங்கள். 10 நிமிடம் இருக்கும்பொழுது உங்கள் தேர்வறைக்கு சென்று உங்கள் இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்.


4. உங்கள் இருக்கையின் அருகில் காகிதங்கள், துண்டுச்சீட்டுகள், புத்தகங்கள் ஏதேனும் காணப்பட்டால் வெளியில் வைத்துவிடுங்கள். நாம் படித்த பாடங்களில்தான் கேள்விகள் வரும் என்ற நம்பிக்கையோடு அமர்ந்திருங்கள்.


5. வினாத்தாளை நிதானமாக வாசித்து நன்கு தெரிந்த கேள்விகளை மனதில் தேர்ந்தெடுங்கள். ( இதற்கு 15 நிமிடம் தேர்வுதுறை ஒதுக்கியுள்ளது)


6. வினாத்தாளில் எவ்வித குறிப்பையும் எழுத வேண்டாம்.


7. உங்களுக்கு நன்றாகத் தெரிந்த கேள்வியை முதலில் எழுதுங்கள், மற்றவற்றை கடைசியாக எழுதுங்கள்.


8. விடைத்தாளில் வினா எண்களை கோட்டுக்கு வெளியேயும், விடையின் எண்களை உள்ளேயும் எழுதுங்கள்.


9. விடைத்தாளில் விடை எழுதும்பொழுது முகப்புச் சீட்டில் உரிய இடத்தில் கையொப்பமிட்டு இரண்டாவது பக்கத்தில் தேர்வு எழுதுபவர் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்ற விதிமுறைகளை படித்துப்பாருங்கள்.


10. உங்களுக்கு என்ன தெரியும் என்பதை விட தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு என்ன பதில் எழுதவேண்டும் என்பதே முக்கியம்.


11. மதிப்பெண்களுக்கேற்ப விடையை சுருக்க மாகவோ, விரிவாகவோ எழுதி நேரத்தை சரி யாகக் கணக்கிட்டு எழுதுங்கள்.


12. விடைத்தாளில் உங்களது கையெழுத்து ஆரம்பம் முதல் இறுதிவரை தெளிவாக இருப்பது அதிக மதிப்பெண் கிடைக்க வழிவகுக்கும்.13. பக்க வரிசைப்படி எழுதுகின்றோமா என விடைத்தாளின் பக்க எண்களை பார்த்து விடையளி யுங்கள். அடுத்த பக்கத்தை புரட்டும்பொழுது இரண்டு மூன்று தாள்கள் சேர்ந்துவிடும் விடை எழுதும் அவசரத்தில் அவற்றைச் சரியாக கவனித்து எழுதவும்.14. நீங்கள் எந்த பேனாவை தேர்விற்கு பயன்படுத்தப் போகிறீர்களோ அந்த பேனாவை தினமும் பயன்படுத்துங்கள்.


15. படம் வரையும்போது, ஸ்கேல், பென்சில் துணைகொண்டு வரையுங்கள். முக்கியமாக ஜியாமெட்ரி பாக்ஸ் எடுத்துச்செல்வது நல்லது.


16. கடைசி 15 நிமிடங்களுக்குள் எல்லா வினாக் களுக்கும் விடையளித்து மீண்டும் ஒருமுறை விடைத்தாளை சரிபார்த்து விட்டுப்போனதை சரியான வினா எண் குறித்து எழுதி நிறைவு செய்யவேண்டும்.


17. தேர்வு நேரம் முடிந்து மணியடிக்கும்வரை தேர்வு கூடத்தில் இருந்து பயனுள்ள வகையில் திருப்புதலைச் செய்யவேண்டும். ஒருமுறை எல்லா பதில்களையும் சரி பார்த்துவிடுங்கள்.


18. மணி அடித்த பிறகு எழுதியதில் ஏதேனும் தவறோ குறைகளோ ஏற்பட்டிருப்பின் அதற்காக மனதை வருத்திக்கொள்ளாது அடுத்தத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடருங்கள்.


19. தேர்வுக்கு நடுவே விடுமுறை வந்தாலும் தேர்வு இருந்தால் எப்படிப் படிப்போமோ அதே உத்வேகத்துடன் படியுங்கள்.


வெற்றி பெற வாழ்த்துகள்!


கட்டுரையாளர்: வே. போதுராசா, முதுகலை பட்டதாரி ஆசிரியர், தேனி; தொடர்புக்கு: pothurasav@gmail.com

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459