அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு நடப்பாண்டு நிதியுதவி வழங்குவதற்கு, பள்ளிக்கல்வி துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் ஊதியம், பராமரிப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு நிதியுதவிகளை அரசு வழங்குகிறது. இதன்படி, நடப்பாண்டு வழங்க வேண்டிய மானிய நிதியுதவியை பட்டுவாடா செய்யும் முன், பள்ளிகளில் முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும் என, மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, சுற்றறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மறு நியமனம் வழங்கப்பட்டிருந்தால், அதற்கு அரசின் அனுமதி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வருகை பதிவேட்டை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்படும் சுயநிதி பிரிவு,
உதவி பெறும் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சோதிக்க வேண்டும்.
பள்ளிகளின் அங்கீகாரம், தற்காலிக அங்கீகாரம் ஆகியவற்றை சோதித்து, தொடர் அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அங்கீகாரம் நீட்டிக்கப்படாத பள்ளிகளுக்கு, கற்பித்தல் மானியத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment