ஜாதி ரீதியாக செயல்பட்ட ஆசிரியர்கள், அவர்களின் சங்கங்கள் மற்றும் மாணவர் விபரங்களை, ஒரு நபர் கமிஷனுக்கு தாக்கல் செய்ய, பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள தனியார் பள்ளி மாணவர் ஒருவரை, ஜாதி பிரச்னையில், ஒரு கும்பல் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே ஜாதி ரீதியான செயல்பாடுகளை தடுக்க, தேவையான வழிமுறைகளை ஏற்படுத்த, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கமிஷன் கேட்டுள்ள விபரங்களை தாக்கல் செய்யுமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
மாணவர்கள், ஆசிரியர்களின் தவறான நடத்தைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பள்ளிகளின் மேலாளர் மற்றும் தாளாளர்களின் பொறுப்புகள் தொடர்பாக, கடந்த 10 ஆண்டு விபரங்களை, ஒரு நபர் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜாதி ரீதியான அமைப்புகள் நடத்தும், வார, மாத இதழ்கள் வாங்கும் பள்ளிகள்; ஜாதி அமைப்புகளில் தொடர்புடைய ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த விபரங்களையும், கமிஷனிடம் வழங்க வேண்டும்.
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ், குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய ஆசிரியர்கள்; மது மற்றும் போதை வஸ்துக்களை பயன்படுத்தும் மாணவர்கள் குறித்த விபரங்கள் மற்றும் போலீஸ் நடவடிக்கைகள் குறித்த விபரங்களும் அளிக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் தவறான நடத்தை குறித்த புகார்களில், முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்திய விசாரணை அறிக்கைகளையும் வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment