மறைமுக பொதுத்தேர்வு தமிழக அரசு மீது ஆசிரியர்கள் அதிருப்தி - ஆசிரியர் மலர்

Latest

14/12/2023

மறைமுக பொதுத்தேர்வு தமிழக அரசு மீது ஆசிரியர்கள் அதிருப்தி

தேசிய கல்வி கொள்கையில், 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற போது எதிர்ப்பு தெரிவித்த, தி.மு.க., அரசு, தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் அரையாண்டு தேர்வை, மாநில பொதுத்தேர்வாக நடத்துவது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அரையாண்டு தேர்வினை, மாநில அளவிலான பொதுத்தேர்வாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இதுவரை பள்ளியளவில் நடத்தப்பட்டு வந்த துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கூட, மாநில அளவில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து, தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 


இது, ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து அவர்கள் கூறியதாவது:தேசிய கல்வி கொள்கையில், 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது, பொதுத்தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனக்கூறி, தமிழகத்தில் பெற்றோர் தரப்பிலும், தி.மு.க., தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது போன்ற காரணத்தால், தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுத்து வருகிறது.ஆனால், பள்ளியளவில் நடத்தப்பட்டு வந்த இரண்டாம் பருவ தேர்வினை, தற்போது ஒன்று முதல் 3ம் வகுப்பு வரை டிச.,15 முதலும், 4, 5 வகுப்புகளுக்கு டிச., 12 முதலும், மாநில அளவில் ஒரே வினாத்தாள்களை கொண்டு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 


துவக்கப்பள்ளிகளில், ஒவ்வொரு தேர்வுக்கும் அருகில் உள்ள நடுநிலை பள்ளிகளுக்கு சென்று, வினாத்தாள்களை அச்சிட்டு வந்து தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான செலவினம் எப்படி செய்வது என்ற தெளிவுரை வழங்கப்படவில்லை.ஓராசிரியர் பள்ளிகளில், இந்த நடைமுறையால் பல சிக்கல்கள் ஏற்படும். மேலும் இத்தேர்வுகளால், மாணவர்களும் பதட்டத்துக்குள்ளாகியுள்ளனர். தற்போது பொதுத்தேர்வு போன்று, துவக்க வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத்தேர்வை நடத்த வேண்டிய அவசியம் ஏன் என தெரியவில்லை. மத்திய அரசு அறிவிக்கும் போது எதிர்ப்பதும், அதே திட்டத்தை பின் மறைமுகமாக அமல்படுத்துவதும் என, தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன.இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459