ஆசிரியா்களை அலைக்கழிக்கும் கள்ளா் சீரமைப்பு நிர்வாகம். - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/10/2023

ஆசிரியா்களை அலைக்கழிக்கும் கள்ளா் சீரமைப்பு நிர்வாகம்.

 

.com/

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கள்ளா் சீரமைப்புத்துறையானது மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தொடக்க/நடுநிலை/உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என சுமாா் 350 அரசு கள்ளா் பள்ளிகளை நிர்வகித்து வருகிறது. கள்ளா் சீரமைப்பு பள்ளிகளை நிர்வகிக்க இணை இயக்குநர் தலைமையில் இணை இயக்குநரின் நேர்முக உதவியாளா், கல்வி அலுவலர்(பொ) மற்றும் பிரிவு அலுவலா்கள் என 20 க்கும் மேற்பட்ட அலுவலா்களுடன் அலுவலகம் இயங்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் கள்ளா் சீரமைப்பு பள்ளிகளுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வானது மதுரையில்தான் நடைபெறும். 


இந்நிலையில் இதுவரைக்கும் இல்லாத நடைமுறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீர்மரபினா் நல இயக்கக அறிவிப்பில் (ந.க.எண்.பி2/622/2023 , நாள்.16.10.23) கள்ளா் பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயா்வு கலந்தாய்வு மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வானது சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் ஆசிரியா்கள் அதிர்ச்சியடைந்துள்ளனா். மூன்று அலுவலர்கள் சென்னையிலிருந்து வந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கான கலந்தாய்வை நடத்துவதற்குப்பதிலாக நூற்றுக்கணக்கான ஆசிரியா்கள் தங்களின் கோப்புகளை எடுத்துக்கொண்டு சென்னைக்கு அலைக்கழிக்கப்பட உள்ளனா்.


அதுவும் 17.10.23 அன்று அறிவிப்பு செய்துவிட்டு 19.10.23 அன்றே கலந்தாய்வை நடத்துவது ஆசிரியா்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் செயலாக உள்ளது என்று பல்வேறு ஆசிரியா்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்றனா். 


மேலும் விழாக்காலங்களில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் அவசர அவசரமாக கலந்தாய்வை   நடத்துவது அதுவும் சென்னையில் நடத்துவதின் அவசியம் என்ன என்பது எங்களுக்கு புரியவில்லை என்று ஆசிரியா்கள் கூறுகின்றனா்.   பல்வேறு சங்கங்கள்  கலந்தாய்வை மதுரையிலேயே நடத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கைகள் வைத்திருந்த போதும் அவையெதையும் பொருட்படுத்தாமல் இருப்பது ஆசிரியா்கள் மீது தொடுக்கின்ற வன்முறையாகத்தான் பாா்க்கிறோம் என்று பல்வேறு  சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனா்.


 மேலும் அவர்கள் கூறுகையில் கலந்தாய்வை வழக்கம் போல் மதுரையில் நடத்த வேண்டும் இல்லையெனில் அது போராட்ட பாதைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனா்.

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459