சென்னை: அனைத்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 38% ஆக உயர்த்தி சமன் செய்து வழங்கிட தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக சேலம், மதுரை உள்ளிட்ட 6 மாவட்டத்துக்கு மட்டும் 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையின் கீழ் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமும், 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்துக்கும், சேலம், மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டத்துக்கும் 38% அகவிலைப்படி வழங்கப்பட்டது.
ஆனால் எஞ்சிய 21 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஒரே சீரான அகவிலைப்படி என்ற நிலை இல்லாமல் 38% குறைவான அகவிலைப்படி வழங்கப்பட்டது. எனவே பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே சீரான அகவிலைப்படி வழங்க வேண்டும் என்ற பால்வளத்துறை அமைச்சரின் உத்தரவின்படி அனைத்து மாவட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 38% ஆக உயர்த்தி சமன் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான அகவிலைப்படி என்ற நிலை உருவாகி உள்ளது. இது பணியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் 1761 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். ஆண்டொன்றுக்கு 3,18,60,948 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
ஆவின் நிர்வாகம் சார்பில் பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போனஸ், ஊக்கத்தொகை, கால்நடைக் கடன், கால்நடை பராமரிப்பு கடன், கால்நடை கொட்டகைக் கடன், கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், நிகர லாபத்தில் ஈவுத்தொகை வழங்குதல், மருத்துவ உதவி, அதிக கொழுப்பு சத்துள்ள பாலுக்கு அதிக விலை, பாலின் தரத்திற்கேற்ப பால் விலையை வழங்க உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்குதல், பால் பணம் காலதாமதமின்றி பட்டுவாடா செய்தல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment