இளநிலை யோகா - இயற்கை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு: - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/09/2023

இளநிலை யோகா - இயற்கை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு:

 1117142

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதில், திருவண்ணாமலை மாவட்ட மாணவி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) 2023-24-ம் கல்வி ஆண்டுமாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஆக,14-ம் தேதி மாலை 5 மணி வரை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் நடந்தது. ஆக.14-ம் தேதி மாலை 5 மணியுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிப்பது நிறைவடைந்தது.


பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் இந்த படிப்புக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2,049 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 734 பேரும் விண்ணப்பித்திருந்தனர். பரிசீலனைக்கு பின்னர், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,990 பேரின் விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 723 பேரின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன.

இந்நிலையில், தகுதியான மாணவ, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல்களை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.


சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை தேர்வுக்குழு தலைவர் பா.மலர்விழி, யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி முதல்வர் மணவாளன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Join Telegram


அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ச.லேகா முதலிடத்தையும் (கட்-ஆஃப் மதிப்பெண் 199.50), காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கா.சுபஸ்ரீ (199.50) இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தரவரிசைப் பட்டியலில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோ.சுஷ்மிதா (197.50) முதலிடத்தையும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரா.வைத்தீஸ்வரி (195.50) இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

7.5 சதவீத உள்இடஒதுக்கீடு: யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு வரும் 11-ம் தேதி காலை 7 மணி அளவில் அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனை வளாகத்தில் தொடங்குகிறது. 13-ம் தேதி வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும், 14-ம் தேதி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறவுள்ளது.




நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் கால்நடை மருத்துவப் படிப்புகள் மற்றும் பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.




ஆனால், யோகா - இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இந்த படிப்புக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் 84 அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள். எனவே, இந்த படிப்புக்கும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.



 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459