காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்: பள்ளிக்கல்வித் துறை புதிய உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

06/07/2023

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்: பள்ளிக்கல்வித் துறை புதிய உத்தரவு

 

1038406

பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


அந்நாளில் மாணவர்கள் புத்தாடை அணிந்து, விழா எடுத்து காமராஜர் படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதன்படி நடப்பு கல்வியாண்டில் வரும் ஜூலை 15-ம் தேதியன்று அனைத்து விதமான பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி தின விழாவை சிறப்பாகக் கொண்டாடத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


மேலும், காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணரும் வகையில் பேச்சு, ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கவேண்டும். இதற்கான செலவினங்களைப் பள்ளி வளர்ச்சி அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியிலிருந்து செய்ய வேண்டும்.


இது சார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதேபோல, அனைத்து முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் காமராஜர்படத்தை அலங்கரித்து வைத்து, கல்வி வளர்ச்சி தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனவும் கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459