பள்ளி கல்வி சார்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அரசு துறைகளில் தொடருது முக்கியத்துவம் - ஆசிரியர் மலர்

Latest

 




03/07/2023

பள்ளி கல்வி சார்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அரசு துறைகளில் தொடருது முக்கியத்துவம்

 

Tamil_News_large_3365024

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கியத்துவம் அளித்து, கூடுதல் நிர்வாக பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.


தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் முதன்மை செயலர் உதயசந்திரன், முதல்வரின் முதன்மை செயலராக பணி அமர்த்தப்பட்டார்.


இவரது பரிந்துரையில், பள்ளிக்கல்வித்துறை பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரும் முக்கிய இடங்களை பிடித்தனர்.


உதயசந்திரன் நிதித்துறை முதன்மை செயலரானாலும், இது தொடர்கிறது.


நேற்று முன்தினம் வெளியான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான இடமாறுதலில், பள்ளிக்கல்வி பணியில் தொடர்புள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, உணவுப்பொருள் வழங்கல் துறை செயலராக சமீபத்தில் மாற்றப்பட்ட ஜெகநாதனுக்கு, அண்ணா நிர்வாக மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.


மனிதவள மேலாண்மை செயலர் நந்தகுமார், பொது துறை செயலராக மாற்றப்பட்டார். அவருக்கு, மனிதவள மேலாண்மை துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக், மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, கூடுதல் பொறுப்பு பெற்றுள்ளார்.


தமிழ்நாடு பாடநுால் கழக மேலாண் இயக்குனர் இளம்பகவத், மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு பணி அதிகாரியாக கூடுதல் பொறுப்பு பெற்றுள்ளார்.


இவர் ஏற்கனவே, தமிழக பொதுநுாலகத்துறை இயக்குனர், இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அதிகாரி ஆகிய இரண்டு முழு கூடுதல் பொறுப்புகளை வகித்து வருகிறார். புதிய உத்தரவின் வழியே, ஒரு நிரந்தர பதவியும், மூன்று கூடுதல் பொறுப்பும் பெற்றுள்ளார்.


இந்த பணியிட மாற்றங்களின்படி, நிதித்துறை செயலராக உள்ள உதயசந்திரனின் நற்பெயரை பெற்று, பள்ளிக்கல்வியில் பணியாற்றிய இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மேலும், கூடுதல் பொறுப்புகளுடன், அரசின் நிர்வாகத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.


கடந்த காலங்களில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியாற்றிய பதவிகள், இளம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459