சர்வதேச தரத்துக்கு மாறும் சென்னை பள்ளிகள் - ஆசிரியர் மலர்

Latest

 




29/05/2023

சர்வதேச தரத்துக்கு மாறும் சென்னை பள்ளிகள்

 சர்வதேச தரத்துக்கு இணையாக மாறி வரும் சென்னை பள்ளிகளில், 2 லட்சம் மாணவர்கள் படிக்கும் அளவுக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்வி தரம் உயர்ந்து வருவதால் இந்தாண்டு 1.75 லட்சம் மாணவர்களை சேர்க்க சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசு பள்ளிகள் என்றாலே போதிய கட்டமைப்பு வசதிகள் இருக்காது, மாணவர்களிடம் கற்றல் குறைபாடு இருக்கும், நவீன தொழில்நுட்பங்களை அவர்கள் அறிந்து வைத்திருக்க மாட்டார்கள் என்று இருந்த காலம் மாறி, தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, அரசுப் பள்ளி மாணவர்களையும் திறம்பட தயார் செய்யும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.


Join Telegram

குறிப்பாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த காலங்களில் மாணவர்கள் சேர்க்கை விகிதமும் எப்போதும் குறைவாக இருக்கும்.


அதேபோன்று தேர்ச்சி விகிதமும் குறைவாகவே இருக்கும். இதற்கு காரணம், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போதிய கட்டமைப்பு இல்லாததும், தரமான ஆசிரியர்கள் இல்லாதது போன்ற காரணங்களை கூறலாம். இந்த நிலைமையை அப்படியே மாற்றுவதற்கான முயற்சிகளை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது. முதல் கட்டமாக, தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் வசதிகளில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகளின் தரம் உயர்த்துவதற்கான அனைத்து பணிகளும் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


சென்னையில் ஏற்கெனவே 281 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் 139 பள்ளிகள் புதிதாக இணைக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் தற்போது 420 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் தற்போது 1.35 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒட்டு மொத்தமாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கும் அளவுக்கு கட்டமைப்புகள் இருந்தாலும், கடந்த காலங்களில் 80 ஆயிரம் என்ற அளவில் தான் மாணவர் சேர்க்கை இருந்து வந்தது. ஆனால் தற்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகளை பெற்றோர் தேடி வந்து சேர்க்கும் அளவுக்கு அதன் கட்டமைப்புகள் சர்வதேச தரத்துக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.


பல்வேறு மண்டலங்களில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் இந்த வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகுப்பறைகள் பார்த்தால் தனியார் பள்ளிகளில் கூட அந்த அளவுக்கு வசதிகள் கொண்ட வகுப்பைறைகள் இல்லை என்றே சொல்லலாம். இந்த திட்டங்களின் கீழ், சென்னை பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுதல், இணையதள வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிவாரியாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. தரமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு மாற்றப்பட்ட சென்னை பள்ளிகள் குறித்து பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டடங்கள், முன்னாள் மாணவர்கள் வாயிலாகவும் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.


சென்னை மாநகராட்சியின் இதுபோன்ற நடவடிக்கைகளால் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் பொது தேர்வில் 85 சதவீத்துக்கு மேல் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இவ்வாறு சர்வதேச தரத்துக்கு இணையாக சென்னை பள்ளிகள் மாற்றப்பட்டு வருவதால் தற்போது 2 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கும் அளவுக்கு அதன் கட்டமைப்பு உள்ளது. இதனால் மாணவர் சேர்க்கையை 1.75 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கோடு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 


சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உள்கட்டமைப்பு தற்போது தரமாக உள்ளது. 2 லட்சம் மாணவர்கள் படிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாநகராட்சி பள்ளியிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளும் உள்ளன. மாணவர்கள் நன்றாக படிப்பதற்காக சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வித்தரம், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், போட்டித்தேர்வுகளுக்கு தயார்ப்படுத்தும் வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, ஆய்வக வசதிகள் போன்றவை வழங்கப்படுவதாக அதிகாரிகள் வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் எடுத்துரைத்தனர். மேலும் இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் முற்றிலும் இலவசம் எனவும் நல்ல முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி பள்ளிகளின் நுழைவு வாயில்களில் விளம்பர பலகை வைக்குமாறு கூறியுள்ளோம். இதன் காரணமாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் 1.75 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு வைத்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


₹200 கோடியில் ‘சிட்டிஸ்’ திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்ற போது அம்மாநில அரசால் அமைக்கப்பட்ட மாடல் பள்ளிகளை பார்வையிட்டார். அதன் படி, தமிழ்நாட்டிலும் இதுபோன்ற பள்ளிகள் உருவாக்கப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில், சென்னை பள்ளிகள் சர்வதேச தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த பள்ளிகள் ‘சிட்டிஸ்’ மற்றும் ‘சிங்காரச் சென்னை 2.0’ ஆகிய திட்டங்களின் கீழ், ₹200 கோடி செலவில் ‘சிட்டிஸ்’ என்ற திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்பறைகள் என்னும் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.


ஹைடெக் ஆய்வகங்கள்

பள்ளி முழுவதும் ‘வை – பை’ வசதி, ‘வெஸ்டன் டாய்லெட்’ வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மைதானங்கள், நவீன சமையலறையும், மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ‘டைனிங்’ வசதியுடன் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர ‘ஹைடெக்’ ஆய்வகங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டு மைதானங்களும் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.

TEACHERS NEWS


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459