அடிக்கப் போகுது மோக்கா புயல்: இன்று முதல் 7ம் தேதி வரை மழை - ஆசிரியர் மலர்

Latest

05/05/2023

அடிக்கப் போகுது மோக்கா புயல்: இன்று முதல் 7ம் தேதி வரை மழை

 IMG_20230505_075821

வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில் வரும், 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது, 'மோக்கா' என்ற புயலாக வலுப்பெற உள்ளது. அதனால், மீனவர்கள் வரும், 7ம் தேதிக்குள் கரை திரும்புமாறு, வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.


தமிழகம், புதுச்சேரியில், ஒரு வாரத்துக்கு முன்பு வரை, கோடை வெயில் கடுமையாக தகித்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, மாநிலம் முழுதும் பல இடங்களில், மிதமான மழை முதல், மிக கனமழை வரை பெய்துள்ளது.


நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது.


செய்யாறு, 12; திண்டிவனம், 11, மணமேல்குடி, மீமீசல், பெருங்களூர், 10; திருப்பத்துார், 9; கடலாடி, ராமேஸ்வரம், சிவகங்கை, 7; காரைக்குடி, பரமக்குடி, வெம்பாக்கத்தில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. மாநிலம் முழுதும், 50க்கும் மேற்பட்ட இடங்களில், மிதமான மழை பெய்துள்ளது.


வரும் நாட்களுக்கான வானிலை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிவிப்பு:


தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில், கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல சூழலை தொடர்ந்து, தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை உருவாகிறது. இது வலுப்பெற்று, வரும், 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.


இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் படிப்படியாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்க கடலில் புயலாக வலுப்பெறும். இதன் நகர்வுகள் கண்காணிக்கப்படுகின்றன.


இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இன்று முதல் வரும், 7ம் தேதி வரை மிதமான மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவில் இருந்து, 4 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும். சென்னையில் அதிகபட்சமாக, 35 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.

Join Telegram

சூறாவளி எச்சரிக்கை


தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில், 7, 8ம் தேதிகளில், 60 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே, 70 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும். தென் கிழக்கு, மத்திய வங்க கடல் பகுதிகளில், வரும், 10ம் தேதி மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.


மேற்கண்ட தேதிகளில், மீனவர்கள் சூறாவளி காற்று வீசும் வாய்ப்புள்ள கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். கடலுக்குள் இருக்கும் மீனவர்கள், வரும், 7ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


இன்று மழை எங்கே?


இன்று காலை வரை ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், கனமழை பெய்யும்.மற்ற இடங்களில் மிதமான வானிலை நிலவும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


மியான்மருக்கு நகரும்


உலக வானிலை ஆய்வு அமைப்பின், அங்கீகரிக்கப்பட்ட இந்திய பெருங்கடல் புயல்களுக்கான பெயர் பட்டியலின்படி, ஏமன் நாடு வழங்கியுள்ள 'மோக்கா' என்ற பெயர், இந்த புயலுக்கு சூட்டப்படுகிறது. மோக்கா என்ற வார்த்தை அரபி மொழியில், பருவகாலம், நிகழ்வு மற்றும் வாய்ப்பு ஆகிய அர்த்தங்களை கொண்டுள்ளது.


மோக்கா புயல் இந்திய பெருங்கடலில், இந்த ஆண்டில் உருவாகும் முதல் புயல்; கோடை காலத்தில் எப்போதாவது உருவாகும் அரிய புயல் வகையைச் சேர்ந்தது. இந்த புயல் தென் கிழக்கில் இருந்து, தமிழகம், ஆந்திராவுக்கு நீண்ட தொலைவில், மத்திய வங்க கடல் அருகே நகர்ந்து, மியான்மரை நோக்கி செல்லும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459