36,000 ஆசிரியர்கள் பணி நீக்கம்!!! - எங்கு தெரியுமா? - ஆசிரியர் மலர்

Latest

14/05/2023

36,000 ஆசிரியர்கள் பணி நீக்கம்!!! - எங்கு தெரியுமா?

 

Tamil_News_large_3320284

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கோல்கட்டா உயர் நீதிமன்றம் 36 ஆயிரம் பேரின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு 2016ம் ஆண்டில் 42 ஆயிரத்து 500 பேர் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.


இதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும் முறையாக ஆசிரியர் பயிற்சி பெறாத ஏராளமானோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் புகார் எழுந்தது.


இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன. அப்போது கல்வி அமைச்சராக இருந்த திரிணமுல் காங்கிரசின் பார்த்தா சட்டர்ஜி அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா ஆகியோர் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


இந்நிலையில் ஆசிரியர் தேர்ச்சி பெற்ற இந்த பட்டியலில் இடம் பெறாத 140 பேர் பணி நியமன உத்தரவை எதிர்த்து கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

gallerye_05535595_3320284

இந்த வழக்கை விசாரித்த கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபதாய் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் அவர் கூறியதாவது: ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்ட 42 ஆயிரத்து 500 பேரில் 6500 பேர் மட்டுமே முறையாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் என தெரிய வந்துள்ளது.


மேற்கு வங்கத்தில் இது போன்ற ஊழல் இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை என கூறும் அளவுக்கு ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது. மேற்கு வங்க ஆரம்ப கல்வி வாரியத்தின் தலைவர் மற்றும் அதில் இடம் பெற்றுள்ளவர்கள் இந்த விஷயத்தில் பெரும் ஊழலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.


விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் பணி நியமனத்துக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


எனவே 36 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவர்கள் இன்றிலிருந்து அடுத்த நான்கு மாதங்களுக்கு மட்டும் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது.


மேற்கு வங்க ஆரம்ப கல்வி வாரியம் மூன்று மாதங்களுக்குள் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை செய்து முடிக்க வேண்டும். இந்த நியமனத்தில் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்; புதிய விண்ணப்பதாரர்கள் பங்கேற்க முடியாது.


கடந்த 2016ல் மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து தேர்வர்களுக்கும் நேர்காணல் திறன் தேர்வு ஆகியவை நடத்தப்பட வேண்டும். ஆட்சேர்ப்புக்கான அனைத்து நடைமுறைகளும் 'வீடியோ' வில் பதிவு செய்யப்பட வேண்டும்.


இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459