சிறார் குறும்பட போட்டியில் வெற்றிபெற்ற திண்டுக்கல் மாவட்டம் அ.குரும்பபட்டி அரசு பள்ளி 7ம் வகுப்பு மாணவி கீர்த்தனாவுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளாக 6,9 வகுப்பு மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், சிறார் குறும்படம், வானவில் மன்றம், வினா-விடை சார்ந்த போட்டிகள், பள்ளி, ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் நடத்தப்படுகிறது. சிறார் குறும்பட பிரிவில், தனி நபர், குழு என 7 வகை போட்டிகள் உள்ளன.
இதில் திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குதல் என்ற தனிநபர் பிரிவில், ஆத்துார் அ.குரும்பபட்டி அரசு நடுநிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவி கீர்த்தனா, மாநில இறுதிப் போட்டியில் பங்கேற்றார் . பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 14 பேர் கொண்ட இவரது குழு முதலிடம் பெற்று அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
கீர்த்தனாவின் தந்தை மதனகோபால் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.
கீர்த்தனா கூறியதாவது: மாவட்ட அளவில் தேர்வாகி மார்ச் 5 முதல் 6 நாட்கள் சென்னையில் பயிற்சி முகாமுக்கு அழைத்துச் சென்றனர். முன்னணி இயக்குனர்கள் பயிற்சி அளித்தனர். பின் நடந்த போட்டியில் 14 பேர் கொண்ட எங்கள் குழுவை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட நகருக்கு அழைத்துச் செல்ல உள்ளதாகவும் பாஸ்போர்ட் ஏற்பாடுகள் நாளை (இன்று) முதல் மேற்கொள்ள ஆயத்தமாகும்படி தெரிவித்தனர். வெளிநாட்டு பயண வாய்ப்பை கனவில் கூட நினைக்கவில்லை.
பிளஸ் 2விற்குப்பின், அரசு திரைப்படக் கல்லுாரியில் இயக்குனர் பிரிவில் பட்டம் படித்து திரைத்துறை இயக்க நுட்பங்களில் புதுமையை புகுத்துவதை இலக்காக கொண்டுள்ளேன், என்றார்.
No comments:
Post a Comment