பங்களிப்பு பென்சன் திட்டத்தின் கொடூரம் - ஆசிரியர் மலர்

Latest

18/04/2023

பங்களிப்பு பென்சன் திட்டத்தின் கொடூரம்


 முழுவதும் படிக்கவும்.                       கணவன் மற்றும் மனைவி இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள கல்லூரியில் நிர்வாகம் அளிக்கும் ஊதியத்தில் பணிபுரிந்தனர். மனைவிக்கு 2004க்குப் பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியராக பணி கிடைக்கிறது. சில ஆண்டுகளில் கணவருக்கு புதுக்கோட்டையில் அமைந்துள்ள கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக நியமனம் கிடைக்கிறது. இருவருக்கும் காலமுறை ஊதியம். (சிபிஎஸ் திட்டம்) இவர்கள் தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் மிகவும் ஆண் மிகவும் உண்டு. மகனுக்கு பிறவியிலே ஆட்டிசம் குறைபாடு உண்டு. பெற்றோர் இருவரும் மகனுக்கு பல்வேறு வகையிலும் மருத்துவம் பார்த்தும் பயனில்லை. இந்நிலையில் இவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டது ஒரு சோக நிகழ்வு. ஆம் ஆசிரியையாகப் பணியாற்றிய மனைவி கொரோனா காலத்தில் இறந்து விடுகிறார். சிறு வயதிலிருந்து மகனை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்த கணவருக்கு முழு நேரப் பணியாக மகனைப் பாதுகாக்கும் பொறுப்பும் சேர்ந்துவிட்டது. இதற்கிடையில் இருந்த பணத்தைக் கொண்டு தன் மகளுக்கு திருமணமும் செய்துவிட்டார். மகள் திருமணமாகிச் சென்றுவிட்டதால் தனியாக மகனை வீட்டில்  விட்டுச் செல்ல இயலாத தந்தை கல்லூரிக்குச் செல்லும் போதெல்லாம் மகனை அழைத்துச் செல்வது வழக்கமாகியது. கடந்த ஆண்டு இவர் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில் இவ்வாண்டு மார்ச் 20ஆம் தேதி தனது வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் நடந்த வாகன விபத்தில்  தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி 25 நாட்களுக்குப் பின்னர்  நேற்றைய தினம் (17.04.2023அன்று ) இறந்துவிட்ட செய்தியை அவரின் மகள் என்னிடம் தெரிவித்தபோது ஒரு கணம் என் மனம் நொறுங்கிவிட்டது. தந்தைக்கு பென்சன் இல்லை. தாய்க்கும் பென்சன் இல்லை. மருத்துவ செலவிற்கு என்ன செய்வது. வேறு வழியில்லாமல் மகள் தன் கணவரின் (நல்ல மருமகன் ) அனுமதியுடன் தன் திருமணத்திற்கு அளித்த நகைகளை எல்லாம் விற்று சுமாராக 15லட்சத்திற்கும் மேலாக செலவு செய்தும் தந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே என்று சொல்லி அந்த மகளுக்கு தேறுதல் சொல்லிவந்தேன். இதில் துயரம் என்ன எனில் தனது நகைகளை எல்லாம் விற்றும் தன் தந்தையைக் காப்பாற்ற முடியாத நிலையில் ஏதும் விபரமறியாத தனது தம்பியை எப்படிக் காப்பாற்றப் போகிறேன் எனக் கதறி அழுதது இன்னும் என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. சி.பி.எஸ். திட்டத்தால் இதைப் போன்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எத்தனையோ ஏராளம். *இதற்கெல்லாம் காரணமான ஒருவர் தன் நிலை மறந்து கடைசி வரையில் தனது மரணத்திற்கான காரணத்தை வெளி உலகம் அறியாத நிலையில் இன்றளவிலும் தெரியாத மர்மமான சூழ்நிலையில் மரணமடைந்தார்*. ஒரு நாள் பதவியில் இருந்தாலும் ஒருவருக்கு ஓய்வூதியம் உண்டு என அறிவிக்கும் அரசு இனியும் வாளாயிருக்காது தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி சிபிஎஸ்இ திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப் படுத்தி சி.பி.எஸ் திட்டத்தால் அரசு அலுவலர்களுக்குத் தொடரும் பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும். அ.ஜனார்தனம் புதுக்கோட்டை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459