வரும் 6ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு: ‘ஆப்சென்ட்’ மாணவர்களை கண்டறிய மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

03/04/2023

வரும் 6ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு: ‘ஆப்சென்ட்’ மாணவர்களை கண்டறிய மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு

 பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு வரும் 6ம் தேதி தொடங்க உள்ளதை அடுத்து, தேர்வுக்கு வர இயலாத மாணவர்கள் விவரங்களை மாவட்ட வாரியாக திரட்ட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு நாளையுடன் முடிவடைய உள்ளன. இந்த இரண்டு தேர்வுகளிலும் 17 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கிய  நாள் முதல்  இரண்டு தேர்வுகளுக்கு சுமார் 50 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுத வரவில்லை.


இதற்கான காரணம் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது. இடைநிற்றல் போன்ற காரணங்களால் மாணவ மாணவியர் தேர்வு எழுத வரவில்லையா, அல்லது தேர்வில் ஆர்வம் இல்லையா என்று கண்டறிய பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த 24ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போதே, பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்துள்ள மாணவ மாணவியர் பற்றிய விவரங்களை பெற்றோர் மூலம் கேட்டறியப்பட்டது. மேலும், தேர்வுக்கு பதிவு செய்திருந்தவர்களை கண்டிப்பாக தேர்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு 25 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்கவில்லை என்பதால், செய்முறைத் தேர்வுக்கான இறுதி நாள் மார்ச் 28ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

சென்னையை பொறுத்தவரையில் 1100 மாணவ மாணவியர் பள்ளிகளில் இருந்து இடைநின்றதால் தேர்வுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 650 பேர் தேர்வு எழுத ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களைப்போல மேலும் பல மாணவர்களை அடையாளம் காண முடியும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அந்தந்த மாவட்டங்களில்,  பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத  இயலாத நிலையில் உள்ள மாணவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும், பள்ளிகளில் இருந்து இடைநின்றவர்களையும் அடையாளம் காண வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களை கண்டிப்பாக தேர்வு எழுத வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும்,  தேர்வுக்கு வர இயலாத மாணவ மாணவியர் குறித்த விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் திரட்டி வருகின்றனர்.


 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459