தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் 4, 5-ம் வகுப்புகளில் உள்ள தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான 3-ம்பருவ தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள், அதற்கான விடைக்குறிப்புகள் தமிழ், ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை எமிஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
அவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளைமுதல் (ஏப்ரல் 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி எஸ்சிஇஆர்டி வழங்கும் தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் அல்லது பள்ளிகளில் ஆசிரியர்களே தயாரிக்கும் வினாத்தாள்களை கொண்டு பருவத்தேர்வை நடத்திக் கொள்ளலாம்.
இதுதவிர ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலமாக மதிப்பீடு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு பிரிண்ட்டர் வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், திருச்சி, சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பிரிண்ட்டர் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட பிரிண்ட்டர்களை பயன்படுத்தி வினாத்தாள்களை பிரதி எடுத்து தேர்வை நடத்த வேண்டும். இதுசார்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment